×

கடநாடு சுற்று வட்டாரத்தில் புலி நடமாட்டம் கண்காணிப்பு பணி தீவிரம்: வன அலுவலர் தகவல்

ஊட்டி: கடநாடு பகுதியில் புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வன அலுவலர் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தற்போது அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.புலி, சிறுத்தை, கரடி, காட்டு யானை மற்றும் காட்டு மாடுகள் உள்ளிட்ட அனைத்து வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இவை குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும், தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகேயுள்ள புதர்களை இவைகள் வாழிடமாக கொண்டுள்ளதால் தேயிலை தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கடநாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த சில நாட்களாக புலி ஒன்று குட்டிகளுடன் உலா வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். சிலர் தேயிலை தோட்டங்களில் உலா வருவதை புகைப்படமும் எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அப்பகுதியில் நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர்கள் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலி நடமாட்டம் உள்ளதா என கண்காணித்து வருகின்றனர். ேமலும், பொதுமக்களும் வனங்களை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது மட்டுமின்றி, அப்பகுதியில் நாள்தோறும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், புலி இதுவரை வனத்துறையினர் அமைத்துள்ள கண்காணிப்பு ேகமராக்களில் பதிவு ஆகாத நிலையில், தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் சச்சின் கூறுகையில், கடநாடு பகுதியில் புலி ஒன்று மக்கள் வாழும் பகுதிக்கு மிக அருகில் வலம் வருவதை சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். சிலர் செல்போன்களில் வீடியோவும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் ெபாருத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஆனால், இதுவரை கண்காணிப்பு கேமராக்களில் புலி சிக்கவில்லை. இதனால், தொடர்ந்து அப்பகுதியில் ஊழியர்கள் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார்.

Tags : Kadanadu , Kadanadu Circuit, Tiger Nomad Surveillance, Forest Officer
× RELATED 5 பை நிறைய ஆவணங்களை தம்பி கொண்டு...