தஞ்சை, காரைக்காலில் பரபரப்பு 4 வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை: மக்கள் திரண்டு போராட்டம்

தஞ்சை: தஞ்சை, காரைக்காலில் நேற்று 4 வீடுகளில் என்ஐஏ சோதனை நடந்தது. இதை கண்டித்து மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவரும், தீவிரவாத அமைப்பான ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு  இருப்பதாக கருதப்பட்டவருமான அப்துல்காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பும், மன்னை பாபா பக்ருதீன் என்பவர் இதே புகாரில் 4 மாதங்களுக்கு முன்பும் கைது  செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய  விசாரணை அடிப்படையில் இந்த இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் அப்துல்காதர் மற்றும் கோழி கறிக்கடை முகமது யாசின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே காவேரி நகரை சேர்ந்த அகமது ஆகியோரது வீடுகளில்  தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் (என்ஐஏ) தலா 3 பேர் நேற்று அதிகாலை 5 மணிக்கு 2 வாகனங்களில் வந்து சோதனையிட்டனர்.

இதையறிந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் முகமது யாசின் வீட்டு முன் திரண்டு கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து தஞ்சை போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடந்தது. அவர்கள், முகமது யாசினின் செல்போன் மற்றும் சில புத்தகங்களை எடுத்து சென்றனர். இதுகுறித்து  முகமது யாசின் கூறுகையில், எனது போனையும், குர்ஆன் உள்ளிட்ட புத்தகங்களையும் எடுத்துச்சென்றனர். ஆய்வு முடிந்த பின்னர் ஒரு வாரத்தில்  செல்போனை ஒப்படைப்பதாக தெரிவித்தனர் என்றார்.

காரைக்கால்: காரைக்காலில் ராவண்ணா நகரை சேர்ந்தவர் அப்துல் அமீன்(41), பாரதியார் வீதியில் மொபைல் ஷாப் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 5 மணியளவில் இவரது வீட்டுக்கு என்ஐஏ அதிகாரிகள் வந்து சோதனை நடத்தினர். அவருடன் கூட்டு  தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தகவல்களையும் சேகரித்தனர். அவரது அழகுசாதன கடை, உணவகம் குறித்த விவரங்களை சேகரித்தனர். அவரது நிதி பரிவர்த்தனை தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும், அவரது செல்போன், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை பற்றியும் விசாரித்தனர். நகர காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை 8  மணி  நேரம் நடந்த சோதனை தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆஜராக உத்தரவு: மெக்கானிக் அப்துல் காதர், முகமது யாசின், அகமது ஆகியோருக்கு என்ஐஏ அதிகாரிகள் அளித்துள்ள நோட்டீசில், வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: