அணுக்கழிவு மைய விவகாரம் சோதனை எலிகளாக தமிழக மக்களை நினைப்பதா? ஒன்றிய அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கேள்வி

சென்னை: அணுக்கழிவு மையத்தை செயல்படுத்த முயலும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை தமிழகஅரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கூடங்குளம் அணு உலை வளாகத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையத்தை அமைக்க ஒன்றிய பாஜ அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது மக்களின் எதிர்ப்புகளை புறந்தள்ளி அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அழிவு திட்டங்களின் கூடாரமாக தமிழகத்தை மாற்ற முனையும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

அணுக்கழிவு மையம் எனும் விஷப்பரீட்சையை தமிழகத்தில் செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிடுவதை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. சோதனை எலிகளாக தமிழக மக்களை மாற்றும் இந்த விபரீதமான விஷயத்திற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமிக்கும் திட்ட நடவடிக்கைகளை உடனடியாக ஒன்றிய ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களின் எதிர்ப்புகளை மீறி, ஆபத்து நிறைந்த அணுக்கழிவு மையத்தை செயல்படுத்த முயன்றால் எஸ்.டி.பி.ஐ. கட்சி தமிழகம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டங்களை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: