தலையில் கல்லை போட்டு வாலிபரை கொன்ற மாஜி ராணுவ வீரர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 7ம் தேதி இரவு சக்தி (35) என்பவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, தேடப்படும் குற்றவாளி சுற்றித்திரிவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு சுற்றி திரிந்த நபரை பிடித்து கோயம்பேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

அதில், தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (57) என்பதும், 1987ல் ராணுவத்தில் சேர்ந்து  2004ம் ஆண்டு ஓய்வு பெற்று, பின்னர் அங்கேயே காவலாளியாக வேலை செய்ததும், பின்னர் தனது குடும்பத்துடன் சண்டை போட்டுக் கொண்டு கடந்த 3 மாதமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி, சமையல் வேலை செய்ததும் தெரியவந்தது. மேலும், கடந்த 5ம் தேதி இவர், சக்தியுடன் மது அருந்தும்போது  தகராறு ஏற்பட்டதும், அதனால், ஆத்திரமடைந்து 7ம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த சக்தி தலையில் கல்லை போட்டு, கொலை செய்துவிட்டு,  அங்கு இருந்து தப்பி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவர்மீது, கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: