×

தேர்தல்களத்தில் களைகட்டும் காவிரிக்கரை நகரம் பள்ளிபாளையம் நகராட்சியில் வெற்றிவாகை சூடப்போவது யார்?

*பல்லாண்டு பிரச்னைகளுக்கு தீர்வு அவசியம்

*பொருத்தமான தேர்வுக்கு காத்திருக்கும் மக்கள்

பள்ளிபாளையம் : தேர்தல் களத்தில் களைகட்டி நிற்கும் காவிரிக்கரை நகரமான பள்ளிபாளையம் நகராட்சியில் வெற்றிவாகை சூடப்போகும் வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பரவலாகி உள்ளது.   முட்டை உற்பத்திக்கும், லாரித்தொழிலுக்கும் பிரசித்தி பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனி அடையாளம் கொண்டவை.

இந்தவகையில் ஜவுளி உற்பத்தியிலும், சாயத்தொழிலிலும் முத்திரை பதிக்கும் நகராட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது காவிரிக்கரையில் அமைந்திருக்கும் பள்ளிபாளையம். பேப்பர்மில், பெரிய அளவிலான ஜவுளி உற்பத்தி மையங்கள் போன்றவை நகரின் பிரதான அடையாளங்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஊராட்சி, பேரூராட்சி என்று பல்வேறு நிலைகளை கடந்து கடந்த 2004ம் ஆண்டு இரண்டாம்நிலை நகராட்சியாக தரம் உயர்ந்தது பள்ளிபாளையம். நாமக்கல் மாவட்டத்தின் இதர நகராட்சிகள் அனைத்தும் பழமை வாய்ந்தது. அதேநேரத்தில் தொழில்வளத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பள்ளிபாளையம் ‘இளையநகராட்சி’ என்று அழைக்கப்படுகிறது.

2006ம் ஆண்டில் திமுக வசமிருந்த பள்ளிபாளையம் நகராட்சி, 2011ல் அதிமுக வசமானது. 2016ம் ஆண்டுக்கு பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடங்கியது. ஆனால் கடைசியாக நிர்வாகத்தில் இருந்த அரசு, பள்ளிபாளையம் நகராட்சியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எதையும் கொண்டுவரவில்லை என்ற மனக்குமுறல் மக்களிடம் உள்ளது. உள்ளாட்சி அமைப்பு முடங்கியதால் அடுத்தடுத்து வந்த ஆண்டுகளிலும் நகராட்சியின் கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் வரும் 19ம்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

தற்போது 21வார்டுகளை கொண்ட பள்ளிபாளையம் நகராட்சி 4.70சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ஆண்கள், பெண்கள், இதரர் என்று மொத்தம் 37,544 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 18,447பேரும், பெண்கள் 19,107 பேரும் உள்ளனர். குறிப்பாக ஆண்களை விட, பெண் வாக்காளர் அதிகளவில் உள்ளனர். இதனால் பள்ளிபாளையம் நகராட்சியில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையல்ல. இவர்களின் வாக்குகளை பெறுவதற்கு திமுக கூட்டணி, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, அமமுக, மநீம, நாதக கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என்று 88 வேட்பாளர்கள் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொருவரின் பிரசாரமும் கவனம் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் கடந்த 10ஆண்டுகளாக நகரின் எந்த முன்னேற்றமும் நிகழவில்லை. அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படவில்லை. இதனால் மாண்டு கிடக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கு புத்துயிர் ஊட்டுவது மிகவும் அவசியம். இந்த நிலையை எந்த வேட்பாளரால் உருவாக்க முடியும் என்பது மிக முக்கியம். அந்தவகையில் வேட்பாளர்களை தேர்வு செய்து வாக்களிக்க காத்திருக்கிறோம். அவர்களில் ஒருவர் நகராட்சி தலைவராகவும், துணைத்தலைவராகவும் பொறுப்பேற்று புதியபாதையில் நகராட்சியை  பயணிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு  காத்திருக்கிறோம் என்கின்றனர் பள்ளிபாளையம் வாக்காள பெருமக்கள்.இது குறித்து பள்ளிபாளையம் நகரமக்கள் கூறியதாவது:

பள்ளிபாளையம் நகராட்சியில் குப்பை பிரச்சனைக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. தெருக்களில் கொட்டி எரிக்கப்படும் திடக்கழிவு மேலாண்மை தடுக்கப்படுவதில்லை. காவிரியின் மறுகரையில் நகராட்சி எரிமேடை இருப்பதால், பள்ளிபாளையம் நகராட்சி மயானத்தில் பிணம் எரிவதற்கு மாறாக குப்பைகளே எரிக்கப்படுகின்றன. காவிரியில் மிதந்து வரும் ஆகாயத்தாமரைகளால் கரையோர மக்கள் தொல்லைப்படுகின்றனர்.  பூச்சிகளின் படையெடும்பும், வெள்ளம் வந்தால் வீடுகளில் புகும் பாம்புகளின் எண்ணிக்கையும் மக்களை அச்சுறுத்துகின்றன. ஒரு வருடமாக பழைய பாலத்தில் பரவி, பின்னி பிணைந்து நீர்பறவைகளில் புகலிடமாகி, ஆற்றையும், நீரையும் அசுத்தப்படுத்திய ஆகாயத்தாமரைகள், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அகற்றப்பட்டன. ஆனாலும் ஆற்று நீர் அசுத்தப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

தொழிலாளர் நிறைந்த பகுதியான பள்ளிபாளையத்தில் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி தரமான சிகிச்சையளிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நான்கு சாலையில் மேம்பாலம் அமைக்கும் வேலைகள் துவங்கியுள்ளன. காவிரி பாலத்திலிருந்து ஆலாம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் வரை மூன்று கிலோ மீட்டர் வரை நீண்டு வரும் இந்த மேம்பாலம், சங்ககிரி சாலையில் ஒட்டமெத்தை வரைகூட தாண்டாமல், நகராட்சி அலுவலகம் முன்பே முடிக்கப்படுகிறது. வெடியரசம்பாளையம் மாதேஸ்வரன் கோயில் வரை இந்த மேம்பாலத்தை நீட்டித்தால்தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க முடியும் என்ற மக்களின் கோரிக்கை எடுபடவில்லை.

மழைக்காலம் வந்தால் பள்ளிபாளையம் வெள்ளக்காடாகும் நிலை நீடிக்கிறது. இதை தீர்க்க இதுவரை நடவடிக்கை இல்லை. ஓட்டமெத்தையிலிருந்து சாலையின் இருபுறமும் நீண்டு வரும் சாக்கடையின் ஒரு பகுதி நான்குசாலையில், ஆக்கிரமிப்பால் மாயமாகிவிட்டது. காவிரியை தேடி ஓடி வரும் வெள்ளம் கால்வாய் கிடைக்காமல், நான்கு சாலையில் புகுந்து வெள்ளக்காடாக தேங்கி விடுகிறது. வெள்ளம் வெளியேற முடியாமல், ராஜவீதி, பழைய போலீஸ் ஸ்டேசன், ஆஸ்பத்திரி ரோடு, கண்டிபுதூர்வரை தேங்கி மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துவிடுகிறது.

நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் கிடக்கும் இந்த வெள்ளப்பிரச்சனைக்கு விடிவுகாணும் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஆளும் கட்சிக்கு இருப்பதால், வாக்காளர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் திட்டத்தை நிறைவேற்ற உறுதியளிக்கும் வேட்பாளர்கள் வெல்லுவதற்கான வாய்ப்பே மிகுந்துள்ளது.
இவ்வாறு நகர மக்கள் கூறினர்.


Tags : Pallipalayam ,Kavirikarai , Pallipalayam: Who are the candidates who are going to win in Pallipalayam municipality, a weedy town in Kavirikarai? Of
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு