பகுதி அனுமதி பெற்றிருந்தால் அது செல்லாது தொழில்நுட்ப படிப்புகளை நடத்த முழு அனுமதி பெற வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ அதிரடி கடிதம்

சென்னை:  நாடு முழுவதும்  உள்ள  அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், அத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரையில் சுமார் 3500 பொறியியல் கல்லூரிகள், 200 கட்டிட வடிவமைப்பு கல்லூரிகள், 3400 பல்தொழில்நுட்ப கல்லூரிகள், 26 இந்திய தகவல் தொழில்நுட்ப பல்கலைகள், 23 ஐஐடிகள், 31 என்ஐடிகள் இயங்கி வருகின்றன. இதுதவிர  தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்   பிஇ, பிடெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகளுடன் பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப படிப்புகள்  நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களிலும், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளிலும் மேற்கண்ட பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 60 தலைப்புகளில் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் இணைப்பு பெற்றுள்ள  பொறியியல் கல்லூரிகள் குறிப்பிட்ட பாடங்களை நடத்த அனுமதியை அந்த பல்கலையின் மூலம்  பெற்று நடத்துகின்றன. இருப்பினும்,  அனைத்து வகை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களும்   அனைத்து வகையான தொழில்நுட்ப படிப்புகளை நடத்துவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற வேண்டும். அப்படி பெறுகின்ற படிப்புகளுக்குத்தான் நாடு முழுவதும், வெளிநாடுகளிலும் மதிப்புண்டு.

இந்நிலையில்,  சில அரசு பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்கள் மேற்கண்ட படிப்புகளை நடத்துவதற்காக இதுவரை  பகுதி அனுமதி பெற்று, அனைத்து தொழில்நுட்ப பாடங்களை நடத்துகின்றன. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக ஏஐசிடிஇ கருதுகிறது. அதனால், தற்போது இருக்கின்ற விதிகளில் திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அனைத்து வகை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும், ஏஐசிடிஇ.யின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:  பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு தரப்பினர் சார்பில்  ஏஐசிடிஇ.க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், குறிப்பிட்ட சில பல்கலைக்கழகங்கள் தங்கள் பல்கலையில் புதியதாக சில தொழில்நுட்ப படிப்புகளை நடத்தவும், தொழில்நுட்ப துறைகளை தொடங்கவும் ஏஐசிடிஇயிடம் முன்அனுமதி பெறவில்லை என்றும், ஏஐசிடிஇ தெரிவித்துள்ள தரத்தையும், விதிகளையும் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும், தொழில்நுட்ப படிப்புகளை மேம்படுத்தவும், தரத்தை கடைபிடிக்கவும் கொண்டு வந்துள்ள ஏஐசிடிஇ.யின் நோக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பல்கலைக்கழங்களில் ஏஐசிடிஇ ஆய்வு செய்யவும் விதிகளில் இடம் உள்ளது என்றும், அதனால், தொழில்நுட்ப கல்வியை நடத்தும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ.யின் முன்அனுமதி பெற்றே தொழில்நுட்ப பாடங்களை நடத்த வேண்டும். மத்திய, மாநில, தனியார், பல்கலைக்கழங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட சில தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப பாடங்களையும், பட்டங்களையும் நடத்தி வருகின்றன.

இதனால் மாணவ, மாணவியருக்கு குழப்பங்கள் ஏற்படுகிறது  என்று உச்ச நீதிமன்றம் மேற்கண்ட வழக்கில் தெரிவித்துள்ளது. இதனால், மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தொழில் நுட்ப பாடங்களுக்கு ஏற்கனவே பெற்றுள்ள பகுதி அனுமதியை ரத்து செய்வது என்றும், இனி பகுதி அனுமதி வழங்கப்பட கூடாது என்றும் ஏஐசிடிஇ முடிவு செய்துள்ளது. எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் தொழில்நுட்ப பாடங்களை நடத்த அனைத்து பாடங்களுக்கும், படிப்புகளுக்கும் முழு அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் ஏஐசிடிஇ.யின் அனுமதி பெற வேண்டும் என்று கடந்த 3.11.2017ம்  ஆண்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் நிறுவனத்தில் தொழில் நுட்ப படிப்புகளையும், பட்டப்படிப்புகளையும், நடத்தவும், முன்அனுமதி பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. ஆனால், அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 2022-23க்கான அனுமதியை இதுவரை பெறவில்லை.

எனவே, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தங்கள் நிறுவனங்களின் மூலம் தொழில் பாடங்களையும், தொழில்நுட்ப பட்டப் படிப்புகளையும் நடத்த ஏஐசிடிஇ அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால், அவர்கள் நடத்தும் குறிப்பிட்ட சில படிப்புகளுக்கு வழங்கப்பட்ட பகுதி அனுமதியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு இஐசிடிஇ உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.ஏஐசிடிஇ.யினன் இந்த அதிரடி கடிதத்தின் மூலம் அனைத்து தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் தற்போது முழு அனுமதியை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.தனியார் நிகர்நிலை பல்கலைகள் தங்கள் நிறுவனத்தில் தொழில்நுட்ப படிப்புகளையும், பட்டப்படிப்புகளையும், நடத்தவும், முன்அனுமதி பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது.

Related Stories: