×

தென்னலூர் ஜல்லிக்கட்டில் 600 காளைகள் ஆவேச பாய்ச்சல்

விராலிமலை: தென்னலூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருநல்லூர் (தென்னலூர்) முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் தை மாதம் 29ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டி தமிழகத்திலேயே சிறப்பு பெற்றது. இங்கு சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படாத நிலையிலும் ஆயிரக்கணக்கான காளைகள், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்பது தனி சிறப்பாகும். இந்த நிலையில் தென்னலூர் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதையொட்டி கடந்த சில நாட்களாக வாடிவாசல் அமைக்கும் பணி, சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது.

இன்று காலை புதுகை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. இறுதியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை டிஆர்ஓ செல்வி துவக்கி வைத்தார். ஆர்டிஓ தண்டாயுதபாணி தலைமை வகித்தார். முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 4 டாக்டர்கள் தலைமையிலான மருத்துவக்குழு, 2 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தது. எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 


Tags : Tennalur Jallikkat , 600 bulls raging in Tennalur Jallikkat
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்