×

வசிப்பது வங்கதேசம்... குடியுரிமை இந்தியா; இளம் வீரருக்கு வழிகாட்டுமா ஐபிஎல்?

பெங்களூரு: கிரிக்கெட்டிற்காக எல்லை கடந்து வந்து சாதிக்க துடிக்கும் இளம் வீரருக்கு ஐபிஎல் தொடர் எதிர்காலத்தை காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் சாதிக்க துடிக்கும் இளம் வீரர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வடிகாலாக விளங்குகிறது. இந்த தொடர்களில் அவர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும்போது அவர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகூட கிட்டுகிறது. தமிழகத்தில் சேலம் சின்னப்பம்பட்டியில் பிறந்த டி.நடராஜன், தனது வேகப்பந்துவீச்சின் திறமை மூலம் இந்திய அணி வரை வாய்ப்பு கிடைத்ததே இதற்கு பெரும் உதாரணம்.

அந்த வகையில் இந்தாண்டும் அமித் முஸ்லேம் அலி என்ற இளம் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 19 வயதே ஆன லெக் ஸ்பின்னரான இவர் திரிபுரா மாநிலத்தில் இருந்து ஐபிஎல் மெகா ஏலத்திற்காக தகுதிப் பெற்றுள்ளார். ஆனால் இவர் கடந்து வந்த பாதை அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் அலி கடந்த 2002ம் ஆண்டு திரிபுராவில் உள்ள கமலாசாகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இந்தியா - வங்கதேசம் எல்லைப் பிரிக்கப்பட்டதில் அமித்தின் வீடு மற்றும் கிராமத்தில் இருந்த சில பகுதிகளும் வங்கதேச எல்லைக்குட்பட்டு சென்றது. எனினும் அவர் இந்திய குடியுரிமை பெற்றவர் ஆவார்.

வீடு வங்கதேசத்தில் இருந்த போதும், இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையில் தினமும் இரு நாட்டு எல்லைகளை கடந்து திரிபுராவில் பயிற்சிக்கு சென்றுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் திரிபுரா அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் அதே அணிக்காக சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் டி20 போட்டியில் அறிமுகமானார். இந்த 2 தொடர்களிலும் சிறப்பாக விளையாடிய அமித் அலி, தற்போது ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திலும் இடம்பிடித்துள்ளார். இவருக்கு வாய்ப்பு கொடுக்க சில அணிகள் முன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அமித்அலி அசத்துவார் என எதிர்பார்ப்போம்.

Tags : Bangadesh ,India ,IPL , Residing in Bangladesh ... Citizenship India; Will the IPL guide the young player?
× RELATED சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல்...