×

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறப்பு!: பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம்..!!

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை, நாளை திறக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி தீபம் ஏற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று விஷேச பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவித்துள்ள கோவில் நிர்வாகம், அடுத்தநாள் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை துவங்கி வைப்பார் என கூறியுள்ளது.

தொடர்ந்து, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். வரும் 17ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான முன்பதிவு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கப்பட்டது. பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் முன்பதிவு கூப்பனுடன் மட்டுமே தரிசனத்திற்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Saparimalai Aiyappan Temple ,Masi Month Poojas , Masi Puja, Sabarimala Iyappan, Devotees
× RELATED சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...