ஊத்துக்கோட்டை அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் வாக்குசாவடிகளில் செல்போன் பயன்படுத்த தடை: தேர்தல் அலுவலர் தகவல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் நடந்த, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், ‘வாக்குசாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்தார்.ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை தேர்தல் நடத்தும் அலுவலர் மாலா தலைமையில்  நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடராஜன், வெங்கடேசலு, முனுசாமி, மண்டல அலுவலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, தேர்தல் அலுவலர் மாலா கூறியதாவது: தேர்தல் பிரசாரத்தில் வேட்பாளருடன் 3 நபர்கள் மட்டுமே செல்லவேண்டும். சமூக இடைவெளியுடன்  முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் அன்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்கு பதிவு நடக்கும், தேர்தல் அன்று வாக்கு சாவடி முகவர்களுக்கு வேட்பாளர்கள் கையெழுத்து போட்டு இருக்க வேண்டும்.  வாக்குசாவடியில், முகவர்கள் அடிப்படையில் உரிய நேரத்தில் காலை 7 மணிக்கு தேர்தல் அன்று வாக்கு பதிவு தொடங்கி விடும், பின்னர் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மட்டுமே பாதுகாப்பு கவசத்துடன் வாக்களிப்பார்கள்.

தேர்தல் முடிந்ததும் வாக்கு இயந்திரத்தில் முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்து தேர்தல் முடிக்கப்படும். வாக்கு சாவடியில் செல்போன் பயன்படுத்த அனுமதி கிடையாது. விரைவில் வேட்பாளர்கள்,  முகவர்கள் புகைப்படத்தை கொடுத்து அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.  இக்கூட்டத்தில் திமுக குமரவேல் , அதிமுக ராமமூர்த்தி, பாஜ தயாளன்,   ராஜேஷ்,  காங்கிரஸ்,  பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: