×

ரூ.258 கோடி மதிப்புடைய வடபழனி ஆண்டவர் கோயில் நிலம் மோசடி!: வேளச்சேரி சார்பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக வேளச்சேரி சார்பதிவாளர் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னை அடுத்த மாடம்பாக்கத்தில் வடபழனி முருகன் கோயிலுக்கு பங்காரு சாமி நாயடு என்பவரால் தானமாக கொடுக்கப்பட்ட 9.86 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் வடபழனி ஆண்டவர் கோயிலில் உற்சவம் நடக்கும் போது ஐப்பசி மாதம் 9ம் நாள் உற்சவம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த இடம் உள்பட மாடம்பாக்கம் பகுதியில் உள்ள 14 ஏக்கர் நிலத்தை விழுப்புரத்தை சேர்ந்த கந்தசாமி கவுண்டர் மற்றும் அவர்கள் மகன்கள் பெயருக்கு 2017ம் ஆண்டு தாம்பரம் சார்பதிவாளராக இருந்த விவேகானந்தன் மாற்றி கொடுத்துள்ளார். பின்னர் அது 64 பட்டாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில், கோயில் நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து தற்போது வேளச்சேரி சார்பதிவாளராக பணிபுரியும் விவேகானந்தன், நிலத்தை அபகரித்த கந்தசாமி கவுண்டர், அவர்கள் மகன்கள் மணி, ரமேஷ் ஆகியோர் மீது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Tags : Vadapalani ,Lord Temple Land ,Velacheri , Vadapalani Lord Temple, land, fraud, lawsuit
× RELATED இறைவன் விட்ட வழி என்று வாழ்க்கையில் இருக்க முடியுமா?