×

லக்கிம்பூர் கேரி வன்முறை விவகாரம்: ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத்: லக்கிம்பூர் கேரி வன்முறை தொடர்பான வழக்கில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அந்த வழியாக காரில் சென்ற ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் ஏறியதில் விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில், 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 8 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விவசாயிகள் மீது, ஒன்றிய இணை அமைச்சர் மகனின் கார் ஏறி கொல்லப்பட்டதற்கான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்  ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அவர் உள்பட வழக்குக் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி வன்முறை சம்பவம் தொடர்பாக 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகையில், ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமின் வழங்கி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Lucknow ,Allahabad High Court ,Ashish Mishra ,Union Home Minister , Lakhimpur Gary, Violence, Ashish Misra, Bail, High Court
× RELATED மதம் மாற அனைவருக்கும் சுதந்திரம்...