×

ஹிஜாப் அணிவதை தடுக்காதீர்; மாணவிகளை படிக்‍க விடுங்கள்: அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தல்

மொராதாபாத்: கர்நாடகாவில் அரசியல் அமைப்பு விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதற்கும், இஸ்லாமிய மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்கும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் கல்லூரியில் தனியாக அமரவைக்கப்பட்டார்கள். இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனிடையே, கர்நாடக அரசு ஒரே சீருடை என்ற சட்டத்தை, மாநிலம் தழுவிய அளவில் அமல்படுத்துவதாக தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து பல கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை கடும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஹிஜாப் பிரச்சனை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, ஹிஜாப் அணிவதற்கான உரிமைக்காக போராடும் சகோதரிகளின் போராட்டம் வெற்றிபெற தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பர்தா, ஹிஜாப் இஸ்லாமத்தின் இன்றி அமையாத அம்சம் என்று கேரள உயர்நீதிமன்றம் வலியுறுத்தியதை அப்போது சுட்டிக்காட்டினார். கர்நாடகாவில் அரசியல் அமைப்பு விதிகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதற்கும், இஸ்லாமிய மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவிகளின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது முற்றிலும் தவறு என்றும் அவர்களை படிக்க விடுங்கள் என்றும் அசாதுதீன் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.

Tags : Azaduddin Owaisi , Hijab, Student, Study, Azaduddin Owaisi
× RELATED கார் மீது துப்பாக்கிச்சூடு.! அசாதுதீன்...