சென்னை மணலியிலிருந்து திருவண்ணாமலைக்கு 1,459 டன் யூரியா சரக்கு ரயிலில் வந்தது

திருவண்ணாமலை: சென்னை மணலியிலிருந்து சரக்கு ரயில் மூலம் 1,459 மெட்ரிக் டன் யூரியா நேற்று திருவண்ணாமலைக்கு வந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான இடுபொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகம் வேளாண்மை துறை மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்களில் யூரியா தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மணலியிலிருந்து 1,459 மெட்ரிக் டன் யூரியா நேற்று சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர், அங்கிருந்து அனைத்து தனியார் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு சரக்கு லாரிகள் மூலம் யூரியா பிரித்து அனுப்பும் பணியை வேளாண் உதவி இயக்குநர்(தரக்கட்டுப்பாடு) என்.விஜயகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், தற்போது மாவட்டத்தில் 3,065 மெ.டன் யூரியா, 817 ெம.டன் டிஏபி, 758 மெ.டன் பொட்டாஷ், 4,460 மெ.டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளதாகவும், தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  வேளாண் துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: