×

நெல்லை அருகே மணல் கடத்தலில் கைதான கேரள பிஷப், 5 பாதிரியார் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

நெல்லை: நெல்லை அருகே மணல் கடத்தல் வழக்கில் கைதான கேரள பிஷப் மற்றும் 5 பாதிரியார்களின் ஜாமீன் மனுக்களை நெல்லை மாஜிஸ்ட்ரேட் தள்ளுபடி செய்தார். நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் பட்டா நிலத்தில் எம்.சான்ட் குவாரி நடத்துவதாக அனுமதி பெற்று சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக கேரள பிஷப் மற்றும் பாதிரியார்கள் மீது மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் மனுவேல்ஜார்ஜ் என்பவர் மீது கடந்த 2021ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய நெல்லை மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநரின் கணவர் முகமது சமீர் மீதும் வழக்கு பதிந்து, அவர் கைது செய்யப்பட்டார். மதுரை ஐகோர்ட் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி கடந்த 5ம் தேதி கேரள மாநிலம், பத்தனம்திட்டா கத்தோலிக்க டயோசிசன் பிஷப் சாமுவேல் மாரி எரேனியஸ், பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சமகாலா, ஜோஸ் கலவியால் ஆகிய 6 பேரை கைது செய்தனர். நெல்லை கோர்ட் இந்த 6 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அப்போது பிஷப் சாமுவேலும், ஜோஸ் சமகாலாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நெல்லை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜோஸ் சமகாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி உள்ள 4 பாதிரியார்களும் நாங்குநேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்நிலையில் கைது செய்யப்பட்ட பிஷப் மற்றும் பாதிரியார்கள் 6 பேரும் ஜாமீன் கேட்டு நெல்லை 1வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். நேற்று அந்த மனுக்களை விசாரித்த நெல்லை ஜேஎம் 1  (பொறுப்பு) மாஜிஸ்திரேட் கடற்கரை செல்வம், 2019ம் ஆண்டு கனிம வள சட்டப்படி அதற்கான சிறப்பு நீதிமன்றம் அல்லது மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Kerala ,Nellai , Kerala bishop arrested for sand smuggling near Nellai, 5 priests' bail pleas dismissed
× RELATED தேர்தல் பரப்புரைக்காக நெல்லை...