
சென்னை: நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதியின் மூத்த மகன் கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து வை ராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்பட சில படங்களில் நடித்தார். இந்நிலையில், கடந்த 2019ல் வெளியான தேவராட்டம் என்ற படத்தில் தனது ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை அவர் காதல் திருமணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக நேற்று சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் காதல் திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க தொடர்புகொண்டபோது, கவுதம் கார்த்திக் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மஞ்சிமா மோகன் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. சோலைக்குயில் என்ற படத்தில் நடித்தபோது, தனக்கு ஜோடியாக நடித்த ராகினி என்பவரை காதல் திருமணம் செய்தவர் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.