×

2வது போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி தொடரை கைப்பற்றியது இந்தியா: ராகுல், சூரியகுமார், பிரசித் அசத்தல்

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 44 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. காயம் காரணமாக போலார்டு ஓய்வெடுக்க, நிகோலஸ் பூரன் தலைமை பொறுப்பேற்றார். இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல்.ராகுல் இடம் பெற்றார். கேப்டன் ரோகித், ரிஷப் பன்ட் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 5 ரன் எடுத்து ரோச் வேகத்தில் விக்கெட் கீப்பர் ஹோப் வசம் பிடிபட்டார். பன்ட், கோஹ்லி இருவரும் தலா 18 ரன் எடுத்து ஓடியன் ஸ்மித் பந்துவீச்சில் வெளியேறினர்.

இந்தியா 12 ஓவரில் 43 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ராகுல் - சூரியகுமார் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. ராகுல் 49 ரன் எடுத்து (48 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். சூரியகுமார் 64 ரன் (83 பந்து, 5 பவுண்டரி), வாஷிங்டன் 24, தீபக் ஹூடா 29 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் ஷர்துல் 8, சிராஜ் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்தது. சாஹல் (11 ரன்), பிரசித் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஜோசப், ஸ்மித் தலா 2, ரோச், ஹோல்டர், அகீல், ஆலன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹோப் - கிங் ஜோடி நிதான தொடக்கத்தை கொடுத்தது. கிங் 18 ரன், டேரன் பிராவோ 1 ரன் எடுத்து பிரசித் வேகத்தில் வெளியேற, ஹோப் 27 ரன் எடுத்து சாஹல் சுழலில் மூழ்கினார். கேப்டன் பூரன் 9 ரன் எடுத்து பிரசித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடி ஆல் ரவுண்டர் ஹோல்டரை (2 ரன்) ஷர்துல் தாகூர் வெளியேற்ற, வெஸ்ட் இண்டீஸ் 22 ஓவரில் 76 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது.

ஓரளவு தாக்குப்பிடித்த புரூக்ஸ் 44 ரன் (64 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), அகீல் உசேன் 34 ரன், ஆலன் 13, ஸ்மித் 24 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பிரசித் வேகத்தில் ரோச் டக் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் 46 ஓவரில் 193 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஜோசப் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பிரசித் 4 விக்கெட் (9-3-12-4), ஷர்துல் 2, சிராஜ், சாஹல், சுந்தர், ஹூடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 44 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags : India ,Rahul ,Suriyakumar ,Prasidh Asathal ,West Indies , India, Rahul, Suriyakumar, Prasidh Asathal win West Indies series in 2nd match
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...