×

படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் விரக்தி; கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: கே.கே.நகர் போலீசார் விசாரணை

சென்னை: படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் மனமுடைந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியின் 2ம் ஆண்டு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வரதராசு(52). இவர் சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பிரிவில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சக்திபிரியா(20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். வழக்கமாக படிப்பில் சக்திபிரியா முதலிடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சில மாதங்களாக படிப்பில் கவனம் செல்லுத்த முடியாமல் பின் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் மன அழுத்ததில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வரதராசு தனது மனைவியுடன் துணி எடுக்க வண்ணாரப்பேட்டைக்கு சென்றுள்ளார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து பல முறை கதவை தட்டியும் மகள் சக்திபிரியா கதவை திறக்கவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் செல்போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த வரதராசு வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, மகள் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வீட்டின் கதவை உடைத்து மகளை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆய்வு செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைதொடர்ந்து கே.ேக.நகர் போலீசார் தற்கொலைகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kilpauk Government Medical College ,KK Nagar , Frustration at not being able to focus on study; Kilpauk Government Medical College student commits suicide by hanging: KK Nagar police investigation
× RELATED மறு கரைக்கு நீந்தி செல்வதாக...