×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான 2ம்கட்ட கணினி முறை குலுக்கல்-கலெக்டர், தேர்தல் பார்வையாளர், கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு

கரூர் : கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகளுக்கான இரண்டாவது கணினி முறை குலுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபுசங்கர் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பொதுப்பார்வையாளரும், பட்டுவளர்ச்சித்துறை இயக்குநருமான சாந்தி ஆகியோர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது,
கரூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 8 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு கருவி மற்றும் ஒரு கட்டுப்பாட்டுக்கருவி என்ற விகிதத்தில், முதலாவது கணினி முறை குலுக்கல் கடந்த மாதம் 6ம் தேதி அன்று நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் தேவைப்படும் கருவிகளின் எண்ணிக்கையினை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலான எண்ணிக்கையில் வாக்குப்பதிவு கருவி மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், போட்டியின்றி தேர்வாகியுள்ள வார்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அகற்றுவதற்கான கணினி முறை குலுக்கல் நேற்று நடைபெற்றது. அதனடிப்படையில், தாந்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, கணினி முறை குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நீக்கப்பட்டு, மீதமுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், எஸ்பி., சுந்தரவடிவேல், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) லீலாகுமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களான அனைத்து நகராட்சிகளின் ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags : Karur Collector ,Office Shake-Collector ,Election Observer ,Party Representatives Participation , Karur: Electronic voting machines to be used for urban local elections in Karur district and
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...