×

நீதித்துறையை பலப்படுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துங்கள்: திமுக எம்.பி. பி.வில்சன் கோரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று திமுக எம்.பி. பி.வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 62ல் இருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை 65ல் இருந்து 75 ஆக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாகவும் உயிர்மூச்சாகவும் விளங்குபவை நீதிமன்றங்கள்.

அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விளக்கம் அளிக்கும் கடைசி மத்தியஸ்தர்கள் நீதிமன்றங்கள் தான். நாட்டின் வரலாற்றை கட்டி காப்பதில் நீதிமன்றங்கள் முக்கிய பணியாற்றி உள்ளன என்று வில்சன் குறிப்பிட்டார். மேலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் நம் உரிமைகளை காக்க நீதிமன்றத்தையே நாடுகிறோம். நீதித்துறையை பலப்படுத்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என பரவலாக கோரிக்கை உள்ளது. நீதிமன்றங்களில் ஏராளமான நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன; லட்சக்கணக்கில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக முன்பு எப்போதையும் விட மக்கள் நலம் மேம்பட்டுள்ளது. தற்காலத்தில் 70 - 80 வயது நிரம்பியவர்கள் கூட திறமையாக பணியாற்றக்கூடிய தகுதியுடன் உள்ளனர். 90 வயதிலும் ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திறமையாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பலவும் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்த பரிந்துரை செய்துள்ளன. எனவே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று வில்சன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Supreme Court ,DMK ,P. Wilson , Supreme Court, High Court Judge, Retired, P. Wilson
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...