×

கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது; கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது; கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டய காலம் என பதிவிட்டுள்ளார். கர்நாடகத்தில் உடுப்பி, தட்சிண கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்  அணிந்து கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வரக்கூடாது என்று அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்து மதத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் காவி துண்டை அணிந்து பள்ளி, கல்லூரிக்கு வந்தனர். இதேபோல், மாநிலம் முழுவதும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டை அணிந்து கல்லூரிக்கு வர தொடங்கினார்கள். இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்றும், உடை அணிவதில் கட்டுப்பாடு விதித்து மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாநில அரசின் ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் முஸ்லிம் மாணவிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு 8-ம் தேதி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர்கள் அமைதி மற்றும் அமைதியைப் பேணுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பொது மக்களின் ஞானம் மற்றும் நல்லொழுக்கத்தின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதுவே நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. போராட்டம் நடத்துவது, வீதியில் செல்வது, கோஷம் எழுப்புவது, மாணவர்களைத் தாக்குவது, மாணவர்கள் பிறரைத் தாக்குவது இவை நல்ல செயல் அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்நிலையில்  இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதின்றம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

Tags : Karnataka ,Kamalhasan , Karnataka, happening, disturbing, provoking, Kamal, tweet
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...