×

அருணாசல பிரதேசத்தில் பனிப் புயலில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் பலி: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் ரோந்து சென்றபோது பனிப் புயலில் சிக்கி, 7 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவத்தின் ஊடுருவல் அடிக்கடி நடக்கிறது. இதனால், இந்த மாநிலத்தில் உள்ள சீன எல்லை பகுதிகளிலும், உயர்ந்த பனி மலைகளிலும் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இம்மாநிலத்தின் கெமாங் மாவட்டத்தில் உள்ள மலையில் 14,500 அடி உயரத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை 7 இந்திய ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுடன் இருந்த  தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இரவாகியும் அவர்கள் முகாமுக்கு திரும்பவில்லை. இதனால், அவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது, அவர்கள் ரோந்து சென்ற பகுதியில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டது தெரிந்தது. அப்பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதலில், 7 வீரர்களும் பனியில் புதைந்து இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை முகாமுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ராணுவ சம்பிரதாய நடைமுறைகள் செய்யப்பட்ட பிறகு, அவர்களின் உடல்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.



Tags : Arunachal Pradesh ,President ,PM , In Arunachal Pradesh Trapped in a blizzard 7 soldiers killed: President, Prime Minister mourn
× RELATED பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின்...