மாநில நூலகக்குழு ஏற்படுத்த திட்டம்: பொது நூலக இயக்கக உயர் நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசனை

சென்னை: மாநில நூலகக்குழு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பொது நூலக இயக்கக உயர் நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர்நிலைக் குழு தலைவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948 மற்றும் தமிழ்நாடு பொது நூலக விதிகள் 1950 ஆகியவற்றில் தேவைப்படும் தக்க திருத்தங்கள் மேற்கொள்ள, அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் முதல் கூட்டம் கடந்த 7ம் தேதி அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் உயர்நிலைக் குழுத் தலைவர் ராசேந்திரன் தலைமையில், பொது நூலக இயக்குநர் இளம்பகவத் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆவுடையப்பன், சுந்தர் கணேசன், ஜெகதீஸ், சம்யுக்தா ரவி, சுந்தர் காளி, தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொது நூலகச் சட்டம் மற்றும் விதிகள் திருத்தம், பொதுமக்கள் மற்றும் சிறுவர்களிடயே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல், நிதி சார்ந்த இடர்பாடுகளை களைதல், உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மேம்பாடு, நவீனத் தொழில் நுட்பம் கொண்ட வாசகப் பயன்பாட்டை மேம்படுத்துதல், மாநில நூலகக்குழு ஏற்படுத்துதல், மின்னுருவாக்கம் மற்றும் மின் நூலகம் தொடர்பாக இதுவரையிலும் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளக் கண்டறிந்து பின்பற்ற ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அரசாணைப்படி ஆறுமாத காலத்திற்குள் அறிக்கை அளிக்கப் பணி அட்டவணை தயாரிக்கவும் பணிப்பகிர்வு மேற்கொள்ளவும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பாகச் செயல்படும் நூலகங்களை நேரில் பார்வையிடவும், இனிவரும் காலங்களில் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொள்ளும் வகையில் குழு கூட்டங்களை இணையவழி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: