கார் விடுவதில் தகராறு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மோகன் சர்மா புகார்

சென்னை: கார் விடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை மிரட்டல் விடுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட நடிகர் மோகன் சர்மா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மா (75) நேற்று புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது: நான் சேத்துப்பட்டு 10வது அவென்யூ ஹாரிங்டன் சாலையில் மனைவியுடன் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி எனது வீட்டின் முன்பு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் வீட்டிற்குள் இருந்து நான் காரை வெளியே எடுக்க முடியாமல் இருந்தது.

உடனே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட காரில் இருந்த நபரிடம் காரை எடுக்கும்படி கூறினோன், ஆனால் அவர் காரை எடுக்காமல் இரும்பு கம்பியை எடுத்து வந்து என்னிடம் தகராறு செய்தார். பிறகு எனது வீட்டில் இருந்த மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றார். இதுகுறித்து நான் அப்போதே கார் பதிவு எண் மற்றும் புகைப்படத்துடன் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஓராண்டு ஆன நிலையிலும் இதுவரை எனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தினமும் வீட்டின் அருகே மர்ம நபர்கள் சுற்றி வருகின்றனர். எனவே நான் அளித்த புகாரின்படி கொலை மிரட்டல் விடுத்து சென்ற மர்ம நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன். இவ்வாறு நடிகர் கூறினார்.

Related Stories: