×

பணியாரம் ருசியாக இல்லை எனக்கூறிய மனைவி கழுத்தை நெரித்துக்கொலை; போதை கணவன் வெறிச்செயல்

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (30), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரண்யா (26). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட லட்சுமணன், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் லட்சுமணன் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நேரத்தில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு 10 மணிக்கு ஈரோட்டில் உள்ள சரண்யாவின் தம்பி நந்தகுமாருக்கு லட்சுமணன் போன் செய்து, உனது அக்கா திடீரென இறந்து விட்டார் எனக்கூறியுள்ளார்.

இதனால், பதற்றமடைந்த நந்தகுமார் மற்றும் அவரது பெற்றோர், உறவினர்கள் கஞ்சநாயக்கன்பட்டிக்கு வந்தனர். அங்கு, வீட்டில் சரண்யா சடலமாக கிடந்துள்ளார். அவரின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டு வீங்கியிருந்துள்ளது. அதுபோக கை, காலில் ரத்தக்காயம் இருந்துள்ளது. இதனால், சந்தேகம் கொண்ட நந்தகுமார், தனது அக்கா சாவில் சந்தேகம் உள்ளது. கணவர் லட்சுமணன் அடித்துக் கொலை செய்திருக்கலாம். அதனால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக லட்சுமணனை பிடித்து வந்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் லட்சுமணன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதுபற்றி போலீசார் கூறியதாவது: சம்பவத்தன்று லட்சுமணன் மது குடித்துவிட்டு, மனைவி மற்றும் குழந்தைகளுக்காக கடையில் பணியாரம் வாங்கி வந்துள்ளார். அதனை சரண்யா சாப்பிட்டுள்ளார். அந்த பணியாரம் ருசியாக இல்லாததால், கணவனிடம் தகராறு செய்துள்ளார். அந்த தகராறில், சரண்யாவை லட்சுமணன் அடித்துக் கீழே தள்ளியுள்ளார். பிறகு, கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மனைவி இறந்தது தெரிந்ததும், அவரது தம்பிக்கு போன் செய்து, திடீரென சரண்யா இறந்து விட்டார் என கூறியுள்ளார் என்றனர். இதையடுத்து, மனைவியை கொன்ற லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.


Tags : Paniyaram , Strangulation of wife who said Paniyaram was not tasty; Drug husband hysteria
× RELATED ஐந்தரிசி பணியாரம்