×

குடியாத்தம் அருகே மாடு விடும் விழா காளைகள் பந்தாடியதில் 25 காளையர்கள் காயம்

குடியாத்தம் : குடியாத்தம் அருகே மாடு விடும் விழாவில் காளைகள் பந்தாடியதில் 25 காளையர்கள் காயமடைந்தனர்.குடியாத்தம் அருகே பெரும்பாடி அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் நேற்று மாடு விடும் திருவிழா நடந்தது. இதில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, காட்பாடி, வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் சார்பில் பணம் பரிசாக  வழங்கப்பட்டது.மாடு விடும் திருவிழாவை காண குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில் காளைகள் ஓடும் வழித்தடத்தில் குறுக்கிட்டபோது, காளைகள் பந்தாடியதில்  25 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாடு விடும் விழாவையொட்டி குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், அக்ரஹாரம் கிராமத்தில் மாடு விடும் திருவிழா நடந்ததால், கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, தனியார் பள்ளி, ரேஷன் கடை,  அஞ்சல் அலுவலகம் ஆகியவை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

குடியாத்தம் அருகே பெரும்பாடி சாலையில் அக்ரஹாரம் கிராமத்தில் இருந்து ஏரிப்பட்டறை, பூங்குளம், சேம்பல்லி, ஜிட்டபல்லி, உப்பரபல்லி, கொட்டாரமடகு  உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்ல அக்ரஹாரம் கிராமம் வழியாக தான் செல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று மாடு விடும் திருவிழா நடந்ததால், அசம்பாவிதங்களை தடுக்க குடியாத்தத்தில் இருந்து ஜிட்டபல்லி கிராமம் வரை செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஆகியவை அவ்வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பக்கத்து கிராமத்திற்குள் நுழைந்த மாடு

அக்ரஹாரம் கிராமத்தில் நடந்த மாடு விடும் விழாவில் பங்கேற்ற மாடு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரும்பாடி  கிராமத்தில் திடீரென நுழைந்தது. அப்போது தெருவில் வெளியே அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அலறி அடித்து வீட்டிற்குள் நுழைந்தனர். பின்னர் மாட்டின் உரிமையாளர்கள்  மாடுகளை பிடித்து சென்றனர். இதனால் பெரும்பாடி கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Gudiyatham: 25 bulls were injured in a bullfight near Gudiyatham.
× RELATED வடசென்னை அனல் மின்நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு