நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு..!!

டெல்லி: நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமுக்கு எதிராக உபா எனப்படும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் 1993ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 250க்‍கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 700க்‍கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்‍குதல் சம்பவத்திற்கு பின்னர், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானுக்கு தப்பியோடிய நிலையில், அவரை நாடு கடத்தும் பணியில் ஒன்றிய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தாவூத் இப்ராகிமுக்கு எதிராக பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனை அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சன்யுக்தா பராஷர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஹவாலா பணம் உள்ளிட்டவை மூலம் இந்தியாவுக்‍குள் பயங்கரவாத நடவடிக்‍கைகளை மேற்கொண்டது மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை அடுத்தே தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்‍குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் என்ஐஏ அதிகாரி கூறியதாவது, முன்னதாக, இந்தியா முழுவதும் நடந்த பல தேச விரோத செயல்களில் தாவூத் ஈடுபட்டது குறித்து பல தகவல்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

அவர் இந்தியாவில் ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறார். மேலும் கலவரம் போன்ற சூழ்நிலையை உருவாக்க அவர்களுக்கு நிதி மற்றும் தளவாட உதவி செய்கிறார். அவர்கள் தொடர்பு கொள்ள பல்வேறு சமூக ஊடக தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களில் சிலரை இடைமறித்து ஆழமாக வேரூன்றிய சதித் திட்டம் தீட்டப்படுவதை அறிந்தோம். தற்போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தாவூத் மற்றும் டி-க்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

Related Stories: