குன்னூர்-கல்லார் வரை ரயில் தண்டவாளத்தையொட்டி யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் இடிப்பு

குன்னூர் : குன்னூர் முதல் கல்லார் வரை யானை வழித்தடத்தை மறித்து கட்டப்பட்ட தடுப்புச்சுவர்களை பொக்லைன் உதவியுடன் இடிக்கும் பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம் குன்னூர் முதல் கல்லார் வனப்பகுதி வரை யானைகள் வாழ்ந்து வருகின்றன. நெடுஞ்சாலை மற்றும் மலை ரயில் பாதையும் வனப்பகுதி  மத்தியில் அமைந்துள்ளன. மலை ரயில் தண்டவாளத்தில் ‌மேம்படுத்த சமீபத்தில் ரயில்வே தண்டவாளத்தில் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து வந்தனர். யானைகள் வழக்கமாக கடந்து செல்லும் பாதையை மறித்து தடுப்புச்சுவர் அமைத்து வந்தனர். இதனால் யானைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்  ஹில்குரோவ் ரயில் நிலையத்தில் தண்ணீருக்காக காட்டுயானைகள் வனப்பகுதியிலிருந்து  தண்டவாளத்திற்கு வந்தது. பாதை மறிக்கப்பட்டதால்  யானைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது. அந்த பகுதியில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது. மேலும் குன்னூர் முதல் முதல் கல்லார் வரை யானை வழித்தடங்கள் மற்றும் அவை கடந்து செல்லும் பாதைகளில் உள்ள தடுப்புச்சுவர்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இந்த ஆய்வில் ரயில்வே அதிகாரிகளுடன் வனத்துறையினர் ஈடுபட்டனர். முதன்மை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் மற்றும் நீலகிரி மாவட்டம் வன அலுவலர் சச்சின் துக்காராம் குன்னூர் வனச்சரகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  இதில்  10-க்கும் மேற்பட்ட இடங்களில் யானை வழித்தடத்தை மறித்து ரயில்வே துறையினர் தடுப்புச்சுவர்களை கட்டியிருப்பது தெரியவந்தது.

அந்த தடுப்புச்சுவர்களை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி 2 பொக்லைன் உதவியுடன் யானைகள் கடந்த செல்லும் பகுதியில் உள்ள தடுப்புச்சுவர்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஈச்சமரம் பகுதியில் உள்ள தடுப்புச்சுவர்கள் இடிக்கும் பணியில்  ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.

Related Stories: