×

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை!: சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு உரை..!!

சென்னை: நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்ற தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கியது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் நடக்கும் சட்டமன்ற கூட்டம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் 13ல் நீட் தேர்வில் விலக்கு கோரி மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 142 நாட்களுக்கு பின் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி பிப்ரவரி 1ம் தேதி சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார். சட்டமுன்வடிவை மறுபரிசீலனை செய்யும்படியும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து பிப்ரவரி 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையை அடிப்படையாக கொண்டு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெறுவது இது 5வது முறையாகும். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன்மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு பெற மசோதா வழிவகை செய்யும்.

பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்கள் சேர மசோதா வழிவகை செய்கிறது. மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறினார். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முக்கிய பாடங்களில் மாணவர் திறனை சோதிப்பதை தவிர்த்து அனைத்து வகை அறிவு என்ற பெயரில் வினோதமான சோதனை முறையை நீட் அறிமுகம் செய்துள்ளது.

நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை. உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுனர் ஒருதலைப்பட்சமாக அணுகியுள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் அதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் 142 நாட்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா என்றும் சபாநாயகர் சரமாரி கேள்வி எழுப்பினார்.

சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்படாதவர்கள் உணர வேண்டும். எனது பணி, கடமையில் இருந்து கடுகு அளவும் விலக மாட்டேன் என்று குறிப்பிட்ட அவர்,  சபாநாயகர் கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்பதை நான் அறிவேன். என் தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொடுத்த பாடம் நினைவில் இருக்கிறது. ஆளுநரை சட்டப்பேரவையில் விமர்சிக்கக்கூடாது என்று கலைஞர் இருந்தபோது பேரவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. அதனை அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Tags : Speaker ,Appavu , NEET EXAMINATION, BILL, TAMILNADU AGREEMENT, MEET
× RELATED மகனுக்கு சீட் தராததால் வருத்தம் இல்லை: சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேட்டி