×

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி உள்ளதா?: தொல்லியல் துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டதா; இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்துசமய அறநிலையத் துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகாவில் டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தொல்லியல் துறை சார்பில் இந்த கோயிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாதுகாக்கப்பட்ட கோயிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம். தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்வது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டும், அதற்கு தொல்லியல் துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆன்மீக நடவடிக்கையாக இல்லாமல், வர்த்தக நடவடிக்கையான இந்த வசதிகளை கோயிலுக்கு வெளியில் செய்து கொடுக்கலாம்.

தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை வேலியே பயிரை மேய்வதைப் போன்றது. எனவே, கோயிலில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கவேண்டும். புதிய கட்டுமானங்களை அப்புறப்படுத்தி, பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, கட்டுமானங்கள் புராதன சின்னத்தில் இருந்து எவ்வளவு தூரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. கட்டுமானங்களுக்கு அனுமதி பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய தொல்லியல் துறைக்கும், தமிழக இந்து சமய அறநிலைய துறைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

Tags : Gangaikonda Cholapuram Temple , Is it permissible to carry out construction work in the protected areas of Gangaikonda Cholapuram Temple ?: Archaeological Department Respondent High Court Order
× RELATED மகா சிவராத்திரியை முன்னிட்டு...