×

திருமழிசையில் ஒத்தாண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் சீதளாம்பிகா சமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த ஜனவரி 27ம் தேதி மங்கள இசை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடந்தது. தினமும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தன. பிப்ரவரி 1ம் தேதி முதல்கால பூஜை, காலை, மாலையில் 11 கால பூஜைகள் செய்யப்பட்டன.

மகா கும்பாபிஷேகம் நேற்று (7ம் தேதி) நடந்தது. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு, 12ம் கால பூஜைகள் துவங்கி, அங்குரார்ப்பணம், சிவசூர்ய பூஜை, காலை 7.20 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு, மூலலிங்க ஜீவன்யாசம், காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.20 மணிக்கு பரிவாரங்கள் மற்றும் மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் செய்யப்பட்டது. சென்னை காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் கோயில் சிவ டி.எஸ்.சண்முக சிவாச்சாரியார் சர்வ சாதகம் ஏற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

தொடர்ந்து, நேற்று மாலை 7 மணிக்கு சீதளாம்பிகா சமேத மனோனு கூலேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், இன்று 8ம் தேதி முதல் மண்டலாபிஷேகமும் நடைபெற உள்ளது என கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழாவில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூஜை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்

Tags : Ottandeswarar Temple Kumbabhishekam ,Thirumalisai , Ottandeswarar Temple Kumbabhishekam at Thirumalisai: Thousands of devotees participate
× RELATED திருமழிசை பேரூராட்சியில் கொரோனா...