×

மதுராந்தகம் நகராட்சியில் திமுக மற்றும் கூட்டணியில் 24 வேட்பாளர்கள் போட்டி: க.சுந்தர் எம்எல்ஏ அறிமுகம் செய்தார்

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சியின் 24 வார்டுகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ அறிமுகம் செய்து வைத்தார்.
மதுராந்தகம் நகராட்சியில் நடைபெறவுள்ள நகரமன்ற உள்ளாட்சி தேர்தலில், 24  வார்டுகளிலும், திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை அறிமுக செய்யும் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார் மமக மாநில அமைப்பு செயலாளர் ஷாஜகான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 2வது வார்டு திமுக வேட்பாளர் குமார் வரவேற்றார். தொடர்ந்து காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, 17வது வார்டு திமுக வேட்பாளர் கே.மலர்விழி குமார் உள்பட அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது. மதுராந்தகம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழகமுதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் ஆவின் பால் லிட்டர் ரூ.3 குறைப்பு, அனைத்து மகளிரும் நகரப் பஸ்களில் இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயிர் காக்கும் திட்டம் உள்பட பல்வேறு நல்ல திட்டங்களை செய்துள்ளார். இந்த சாதனைகளை பொதுமக்களிடம் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும்.

வாக்காளர்களை தினமும் காலை, மாலை என இருவேளையும் சந்தித்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். மூத்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடு ஏழுமலை, லத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மலர்விழி குமார், வார்டில் உள்ள திமுக முன்னோடிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாக்குகள் சேகரித்தார்.


Tags : DMK ,Madurantakam ,K. Sundar ,MLA , In Madurantakam municipality 24 candidates in DMK and alliance contest: K. Sundar MLA introduced,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு