வேலூர் மாநகராட்சி 24வது வார்டு பாமக வேட்பாளர் கடத்தப்பட்டதாக ராமதாஸ் டிவிட்டர் பதிவுக்கு பதிலடி: சால்வை அணிவித்த வீடியோவை திமுக எம்எல்ஏ வெளியிட்டார்

வேலூர்: வேலூர் மாநகராட்சி 24வது வார்டு பாமக வேட்பாளர் ஆர்.டி.பரசுராமனை திமுகவினர் கடத்தி சென்று விட்டதாகவும், போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று மிரட்டுவதாகவும், மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதற்கு உடனடியாக வேலூர் மாவட்ட திமுக செயலாளரும், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘‘கடத்தப்பட்டதாக பாமக நிறுவனரால் சொல்லப்பட்ட வேட்பாளர், எங்களை சந்தித்து திமுகவில் தன்னை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, எனக்கும், வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் சால்வை அணிவித்தார்.

அதற்கான வீடியோவையும் தாங்கள் காணலாம். உண்மைக்கு புறம்பாக செய்தியை வெளியிட்டு எங்களுக்கு களங்கம் விளைவிக்கும் கயவர்களை இனம் கண்டு மக்கள் தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் இணைத்துள்ள வீடியோவில் வேட்பாளர் பரசுராமன் தனியாக பைக்கில் நந்தகுமாரின் அலுவலகம் வருவது, அங்கு அவருக்கும், எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும், காங்கிரஸ் மாநகர செயலாளர் டீக்காராமன் ஆகியோருக்கும் சால்வை அணிவிப்பதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

 இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் கூறியதாவது: ‘‘மாநகராட்சி 24வது வார்டு பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரசுராமன் எங்களிடம் வந்து, பாமகவில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது. எனவே 24வது வார்டில் திமுக சார்பில் நான் நிற்கிறேன், சீட் கொடுங்கள் என்று கேட்டார். அதற்கு நான், ‘‘திமுக சார்பில் சுதாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். எனவே உங்களை அறிவிக்க வாய்ப்பில்லை’’ என்று கூறினேன். அதன்பிறகு அவர் வெளியே சென்று விட்டார். திமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் அவர் வெளியில் சென்று திரித்து இதுபோல் கூறி, பாமக நிறுவனரும் தனது டிவிட்டரில் எதையும் விசாரிக்காமல் பதிவிடுவது நியாயமில்லை. அவரது கட்சி வேட்பாளர்கள் வேலூர் மாநகராட்சியில் 25 முதல் 30 பேர் வரை போட்டியிடுகின்றனர். குறிப்பாக இவரை மட்டும் அழைத்து நாங்கள் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Related Stories: