×

கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளைகளை நடக்க விட்ட எடப்பாடிக்கு திமுக ஆட்சியை குறை கூற அருகதை இல்லை: சேலம் பிரசார கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொலி வாயிலாக சேலம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு: 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்-490 பேரூராட்சிகள் என மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடக்க இருக்கிறது. 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள்- 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள்- 3,468 நகராட்சி உறுப்பினர்கள் ஒரே கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இவை அனைத்திலுமே திமுக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நமக்கான செல்வாக்கு என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மிக அதிகளவு கூடி இருக்கிறது. நமக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் கூட, இப்போது நமக்காக வாக்களிக்கும் முடிவோடு அந்த மனநிலைக்கு வந்து விட்டார்கள். நம்மைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, இப்போது தங்களது விமர்சனத்தைக் குறைத்துவிட்டார்கள். எனவேதான் நாம் முழுமையான வெற்றியைப் பெறுவோம் என்று சொன்னேன். இதில் சேலத்தின் வெற்றிச் செய்தி மிகமிக முக்கியமானது என்பதை முதலிலேயே நான் சொல்லிக் கொள்கிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், இங்கு நாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற இயலவில்லை. அதற்கான காரணங்களுக்குள் நான் இப்போது செல்ல விரும்பவில்லை. சட்டமன்றத் தேர்தலில் கைநழுவிய வெற்றியை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் கைப்பற்றியாக வேண்டும். இந்த உறுதிமொழியை மாவட்ட செயலாளர்கள்-நம்முடைய நிர்வாகிகள்- திமுக வேட்பாளர்கள் - கூட்டணிக்கட்சியைச் சார்ந்த தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்கத்தின் வரலாற்றில் மிக முக்கியமான ஊர் இந்த சேலம். 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் நாள் இதே சேலத்தில் தான் நமது தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் உருவானது. பேரறிஞர் பெருந்தகை அண்ணா தான் அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.

அதிலிருந்து உருவானதுதான் நம்முடைய திமுக. இத்தகைய பெருமைக்குரிய மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும். முத்தமிழறிஞர் கலைஞரின் இளமைக் கால வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஊரும் சேலம்தான். 1949-50 காலக்கட்டத்தில் சேலம் கோட்டைப் பகுதியில் ஹபீப் தெருவில் தான் கலைஞர் வாழ்ந்து வந்தார். சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்காக சேலத்தில் தங்கி மந்திரிகுமாரி படத்துக்குக் கதை-வசனம் தீட்டினார். இத்தகைய மாவட்டத்தில் கழகம் முழுமையான வெற்றியைப் பெற்றாக வேண்டும்.  சேலம் மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக இருக்கும் நேருவும்-மாவட்டச் செயலாளர்களும்-மற்ற பொறுப்பாளர்களும்  நிர்வாகிகளும் திமுக முன்னணியினரும், தோழர்களும் அந்த வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது. இன்னும் சொன்னால் இந்த சேலம் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டிய ஆட்சி திமுக ஆட்சி என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். இப்படி அதிமுகவினரால் பட்டியல் போட்டுச் சொல்ல முடியுமா.

முன்பு முதல்வராக இருந்தவர், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான். அவர் தனது சொந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார். அதனை அவரால் பட்டியல் போட முடியுமா. நேற்றைய தினம்(நேற்று முன்தினம்) எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பழனிசாமி, திமுக-பொய்யான -கவர்ச்சியான வாக்குறுதிகளைத் தந்ததாகக் குற்றம் சாட்டி இருக்கிறார். நாங்கள் கொடுத்த வாக்குறுதியில் 70 விழுக்காடு வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்பது மக்களுக்கே தெரியும். சொன்னதோடு சேர்த்தோடு சொல்லாத திட்டங்களையும் செய்து காட்டியிருக்கிறோம்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மகளிருக்குப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் - இதனால் 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 61 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்  7.5 சதவிகித சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு சேர்க்கை அரசு ஆணை.

 “இல்லம் தேடிக் கல்வி” திட்டம். இன்னுயிர காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம்”. ”மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம். காவேரி டெல்டாவில் 61 கோடி ரூபாய் செலவில் குறுவை சாகுபடித் தொகுப்பு ஆக்கிரமிப்பிலிருந்த 1,628 கோடி ரூபாய் மதிப்பிலான 432 ஏக்கர் பரப்பளவிலான திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் நினைவு மண்டபம். தமிழக வரலாற்றில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து. - இவை அனைத்தும் எட்டு மாத காலத்தில் செய்யப்பட்டுள்ளதில் சில மட்டுமே. பழனிசாமி இந்த எட்டு மாத காலத்தில் எங்கே பதுங்கி இருந்தார். அவர் எதை கவர்ச்சியான வாக்குறுதி என்கிறார். எதைப் பொய்யான வாக்குறுதி என்கிறார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது. அதில் உண்மைக் குற்றவாளி யார் என்றும் உண்மையான காரணம் யார் என்றும், கூலிப்படையை அமர்த்தியது யார் என்றும், ஏவியது யார் என்றும் கண்டுபிடித்தாரா.

அதைக் கண்டுபிடிக்கத் துப்பு இல்லாதவர்களுக்கு திமுக ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல என்ன அருகதை இருக்கு. எனவே திமுக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம் என்று வாக்குறுதி அளித்த தமிழினத் தலைவர் கலைஞரின் மகன் நான். கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அப்படி நாங்கள் நிறைவேற்றுவது எல்லாம் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேருவதற்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுக வேட்பாளர்களும் கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற்று பங்கெடுத்தாக வேண்டும். அதற்காகத்தான் வாக்குக் கேட்டு உங்கள் முன்னால் நிற்கிறேன். உதயசூரியன் - உங்களது இதய சூரியன் அதனை மறந்து விடாதீர்கள். உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர உங்களது பொன்னான வாக்குகளை வாரி வழங்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Kodanadu ,Dimugha ,Edapadi ,Bangladesh ,Salem ,KKA Stalin , Edappadi has no qualms about blaming the DMK regime for the murders and robberies at the Kodanadu bungalow: Chief Minister MK Stalin's speech at the Salem campaign meeting
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக...