அதிமுக கூட்டணியில் இருந்து பாரதிய ஜனதா விலகியதால் மாஜி அமைச்சர் மகிழ்ச்சி

விழுப்புரம்: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக விலகியதால் அதிமுகவுக்கு மகிழ்ச்சி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஒன்றிய அரசு நீட் மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. எனவே இதனை நீக்க சட்ட ரீதியாக தான் தீர்வு காண முடியும் என்று கூறியிருந்தோம்.

நாங்கள் மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அப்போது குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார். மேலும் அதற்கான காரணத்தையும் கூறவில்லை. இதையடுத்து தற்போது திமுக அரசு அனைத்து கட்சியும் சேர்ந்து நீட் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பினார்கள். ஆனால் ஆளுநர் நிரகாரித்துவிட்டார் என்றார். அப்போது, அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி விட்டதே என்று நிருபர்கள் கேட்டதற்கு ‘வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக விலகியது அதிமுகவிற்கு மிகுந்த சந்தோஷம்’ என்றார்.

திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - சென்னை புறவழிச் சாலை அருகே உள்ள தனியார் ஹாலில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கூட்டணி கட்சிகள் அதிமுகவிலிருந்து விலகியதால் ஒரு வாரகாலமாக தான் அதிமுக நிர்வாகி முதல் தொண்டர்கள் வரை சந்தோஷமாக இருக்கின்றனர். யாரோ செய்த தவறுக்கு நாம் பதில் சொல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது அந்த பழியிலிருந்து விலகியுள்ளோம். இதனால் அதிமுகவினர் சந்தோஷமாக இருக்கின்றனர் என்றார்.

Related Stories: