×

ஆந்திர மாநில எம்எல்ஏ ரோஜா மற்றும் அவரது கணவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர பிரதேசம் மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா மற்றும் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரோஜா அளித்த பேட்டி வருமாறு: எனது தொகுதி நகரி, தமிழக எல்லைப் பகுதியில் இருப்பதால் அது சம்பந்தப்பட்ட விஷயங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக வந்துள்ளோம். அவரது சந்திப்புக்கான நேரம் உடனடியாக கிடைத்தது.

மிகுந்த நட்பின் அடிப்படையில் எங்களை அவர் வரவேற்றுப் பேசினார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இப்போதுதான் முதன்முறையாக சந்தித்தேன். ஆனால் பல நாட்கள் பழகியதுபோல மிகுந்த நட்புடன் சாதகமாக பேசினார். நான் கொடுத்த சில பிரச்சினைகள் பற்றிய மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு, அதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

எனது முக்கிய கோரிக்கை என்னவென்றால், எனது தொகுதியில் தமிழ் மீடியம் பள்ளிகள் உள்ளன. அவை மெட்ரிக் கல்வித் திட்டத்தின் கீழ் வருகின்றன. எனவே அதற்காக 1 முதல் 10-ம் வகுப்புவரை ஆயிரம் தமிழ்ப் பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டும் அவற்றை உடனடியாக அனுப்பி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சாலை அமைக்கும் பணி

திருத்தணி தாலுகாவில் விஜயபுரம் என்ற ஊர் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தொழில்பேட்டைக்காக 5,600 ஏக்கர் நிலத்தை ஆந்திரபிரதேச தொழில் உள்கட்டமைப்பு கழகம் ஆர்ஜிதம் செய்துள்ளது. அதன் தலைவராக 2 ஆண்டுகள் இருந்தேன். தொழில்பேட்டை இணைப்பு சாலைக்காக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

நெடும்புரம் - அரக்கோணம் இடையே நெடுஞ்சாலை அமைப்பதற்காக இரண்டு மாநிலங்களும் நிலம் வழங்க வேண்டும். இது 4 வழிச்சாலையாகும். இந்த தொழிற்சாலைக்கு தமிழகத்தில் இருந்து கனரக வாகனங்கள் வரமுடியும். விமான நிலையம், துறைமுகம் ஆகியவற்றிற்கு அருகே இந்த தொழில்பேட்டை இருப்பதால், பலரும் அங்கு தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசுக்கு கடிதம் அளித்து நாளாகிவிட்டது. இதிலுள்ள அவசரத்தை நேரில் பார்த்து தெரிவித்தால் அதை புரிந்துகொள்வார்கள் என்பதால் இங்கு வந்தோம். இதுபற்றி சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்துவிட்டு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அரசு ஆஸ்பத்திரியில்....

மேலும் எனது தொகுதியான நகரி மற்றும் நெல்லூர், சத்தியவேடு, சித்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து, தெலுங்கு தெரியாத, தமிழ் பேசத் தெரியும் நோயாளிகள் பலரும் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வருகிறார்கள். அவர்கள் சிகிச்சைக்காக திருப்பதி, விஜயவாடாவுக்கு செல்வதில்லை. சென்னை வரும் அவர்களுக்கு சில நேரம் சிகிச்சை மறுக்கப்படுகிறது.

எனவே அங்குள்ள தமிழர்களுக்கு இங்குள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் மற்ற தமிழர்களைப் போல உரிமை அளிக்க வேண்டும். கொரோனா காலகட்டம் முடிவடைந்ததும் அதற்கான வசதிகளை செய்வதாக உறுதி அளித்தார். அவருக்கு மிகுந்த நன்றி.

நெசவாளர் மேம்பாடு

எனது கணவர் ஆர்.கே.செல்வமணி தென்னிந்திய நெசவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். எனது கணவர் நெசவாளர் என்பதால் அந்த சமுதாயத்தினரின் மருமகள் என்ற முறையில் ஆந்திரா மாநில முதல்-மந்திரியுடன் பேசி, நகரியில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் ஜவுளித் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்காக நாங்கள் பல நன்மைகளை செய்து வருகிறோம்.

தமிழக முதல்-அமைச்சரிடமும் இங்குள்ள நெசவாளர்களுக்கு மேம்பாட்டிற்காக என்னென்ன செய்ய முடியும் என்பது பற்றி பேசியிருக்கிறோம். இங்கு பணியாணை கிடைக்காததால் வேலையில்லாமல் நெசவாளர்கள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களுக்காக பேசி வருகிறோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகவடிவத்தை பட்டுத் துணியில் நெய்து கொண்டு வந்துள்ளோம். நெசவுத்தொழில் மேம்பாட்டிற்காக கழகங்கள் மூலமாக குறிப்பிட்ட தொகையை நெசவாளர்களுக்கு வழங்கி ஆதரவளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி உடனிருந்தார். பட்டுத் துணியில் நெய்யப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை, அவரிடம் இந்த சந்திப்பின்போது 2 பேரும் வழங்கினர்.

Tags : Andhra Pradesh ,MLA ,Roja ,RK Selvamani ,Chief Minister ,MK Stalin , Andhra Pradesh MLA Roja and her husband Director RK Selvamani meet Chief Minister MK Stalin
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி