×

2 ஆண்டுகளுக்கு பிறகு குளிக்க அனுமதி மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அம்பை:  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மணிமுத்தாறு அருவியில் குளிக்க நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில்  களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் மாஞ்சோலை செல்லும் வழியில்  மணிமுத்தாறு அருவி உள்ளது. மாவட்டத்தில் உள்ள பிரதான அருவிகளில் ஒன்றான இந்த அருவியில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். கடந்த 2020 ஜனவரி மாதம் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் மணிமுத்தாறு அருவியில் சில பகுதிகள் சேதமடைந்து இருந்ததாலும், இதைத்தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மணிமுத்தாறு அருவியில்  குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து நேற்று முதல் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் காலையிலேயே உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து மக்கள் பைக், ஆட்டோ, கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக வருகை தந்தனர். கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மட்டுமே அனுமதி என்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் வந்த சுற்றுலா பயணிகளை மணிமுத்தாறு வனத்துறை சோதனை சாவடியில் திருப்பி அனுப்பினர். இதனால் ஆவலுடன் அருவியில் குளித்து மகிழ ஆட்டோ, பைக்குகளில் வந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கடந்த காலத்தை போல் அனைத்து வாகனங்களிலும் மணிமுத்தாறு அருவிக்கு செல்ல அனுமதி வழங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகஸ்தியர் அருவிக்கும் படையெடுப்பு
ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும், கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக கடந்த 2 மாதங்களாகத்தான் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை நாளாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். ஆனால் அருவிக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதாக சுற்றுலா பயணிகள் கவலை தெரிவித்தனர். இந்த சாலையை உடனடியாக வனத்துறையினர் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Manimuttaru Falls , Permission to bathe after 2 years Tourists congregate at Manimuttaru Falls
× RELATED மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு: மக்கள் கூட்டம் அலைமோதல்