திருவாரூர் கமலாலயகுளம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் ஆறு போல் வழிந்தோடுவதால் தொற்றுபரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூர் கமலாலய குளம் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை கழிவுநீரானது ஆறு போல் வழிந்தோடியதால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது.30 வார்டுகளை கொண்ட திருவாரூர் நகரில் பாதாள சாக்கடை திட்டமானது ரூ. 50 கோடி மதிப்பில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு தற்போது வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் கழிவுநீர் தொட்டிகளில் நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் அடைப்புகள் ஏற்படுவதும் அதனை நகராட்சி ஊழியர்கள் சரிசெய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பணியினை பராமரிப்பதற்கு கடந்த 2019ம் ஆண்டில் நகராட்சி சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டென்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ஒன்றுக்கு ரூ 4 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு செலவிற்காக நகராட்சி மூலம் வழங்கப்படும் நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையினை கூட அந்த தனியார் நிர்வாகம் செலவு செய்யாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கென நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீரேற்றும் நிலையங்கள் கட்டப்பட்டு அதில் நகராட்சி சார்பில் மின்மோட்டார்கள் அமைத்து கொடுக்கப்பட்ட போதிலும் இந்த தனியார் நிறுவனமானது அதனை கூட சரிவர பராமரிக்காமல் பல்வேறு இடங்களில் பழுது ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நேரங்களில் கழிவுநீரானது வீடுகளுக்குள் புகும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த கழிவுநீர் குழாய்களும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு மேனுவல் தொட்டியிலிருந்து சாலைகளில் கழிவுநீர் வழிந்தோடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி ராமகே ரோடு கேக்கரை ரயில்வே கேட் அருகே இந்த கழிவுநீரானது மேனுவல் தொட்டியிலிருந்து வழிந்தோடிய வண்ணம் இருந்து வருகிறது. இதுமட்டுமினறி கேக்கரை வடக்கு தெருவில் இதுபோன்று கழிவுநீரானது ஆறுபோல் வழிந்தோடுவதன் காரணமாக அருகில் செல்லும் பாசன வாய்கால் மற்றும் வயல்களில் குளம் போல் தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

இதேபோன்று நகரின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீரானது வழிந்தோடி வரும் நிலையில் நேற்று வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தின் வடக்கு கரையில் கழிவுநீர் ஆறுபோல் வழிந்தோடியது. இதன்காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோயும் பரவும் அபாயம் இருந்து வருகிறது. எனவே இந்த கழிவுநீர் வழிந்தோடுவதை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: