×

அஞ்செட்டி வனப்பகுதியில் யானையை சுட்டுக்கொன்ற மேலும் ஒரு வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகம் உடுபராணி வனப்பகுதியில், கடந்த 2ம்தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, யானையை வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்து, தந்தங்களை சேகரித்த பின்னர், அங்கேயே புதைத்தனர். பிரேத பரிசோதனையில் யானையின் தலையில் துப்பாக்கி குண்டு இருந்ததால், யானை சுட்டு கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வனத்துறையினர் யானையை சுட்டு கொன்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், எருமுத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முத்து(35), ஏழுமலையான்தொட்டி காளியப்பன்(28) ஆகியோர் காட்டு பகுதியில் முயல் வேட்டைக்கு சென்ற போது, எதிர்பாராதவிதமாக யானையிடம் சிக்கி கொண்டதாகவும், யானை துரத்தியதால் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்களிடமிருந்த கள்ளதுப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் தந்தத்திற்காக யானையை சுட்டு கொன்றனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாண்டுரங்கன்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பா(25) என்பவரை, நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Anchetti forest , Another youth arrested for shooting elephant in Anchetti forest
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...