ஸ்ரீபெரும்புதூர்: பிரபல ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகளான அதிமுக மற்றும் பாமக நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படப்பை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்பட 48 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் இவரை போலீசார் தேடியபோது, வெளி மாநிலம் சென்று தலைமறைவானார்.
இந்நிலையில், அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் குணாவை, போலீசார் என்கவுன்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும், என தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலளித்த போலீசார், படப்பை குணாவை என்கவுன்டர் செய்யும் எண்ணமில்லை. அவரிடம் விசாரிக்கவே தேடி வருகிறோம் என தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த மாதம் 25ம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் படப்பை குணா சரணடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த படப்பை குணாவின் கூட்டாளியும் அதிமுக நிர்வாகியான போந்தூர் சேட்டு (48) மற்றும் பாமக நிர்வாகியான மாம்பாக்கம் பிரபு (37) ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் இரவு பெரும்புதூர் அருகே ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதில், சேட்டு என்பவர் ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனராவும், அவரது மனைவி யுவராணி ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீது ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இவர்கள் மேற்கண்ட பகுதிகளில் தனியார் தொழிற்சாலை நிர்வாகிகளை மிரட்டி, இரும்பு கழிவு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கெனவே, சேட்டுவின் தம்பி போந்தூர் சிவா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
