×

ரேஷன் அரிசியை விற்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை : குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை

புழல்: செங்குன்றம் நெல், அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில், குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சார்பில், நேற்று முன்தினம் மாலை நெல், அரிசி வியாபாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபி ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில்  நடைபெற்றது. காவல் கண்கானிப்பாளர் ஸ்டாலின், துணை கண்கானிப்பாளர் கிருஷ்ணன் ஆலோசனையின் பேரில், சென்னை வடக்கு மாவட்ட ஆய்வாளர் முகேஷ்ராவ், திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் இதற்கு தலைமை தாங்கினார்.

இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்து கொண்டு வரும்போது, உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும், அதே போல வெளி மாநிலங்களுக்கு நெல் அனுப்பி வைக்கப்படும் போதும், உரிய அனுமதி பெற்று கொண்டு செல்ல வேண்டும் எனவும், வெளிமாநிலங்களில் இருந்து, நெல் கொண்டு வந்து அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சில இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்வதால், தமிழக விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாவார்கள் எனவும், அரசு அறிவுறுத்தலின்பேரில் உரிய ஆவணங்களை கொண்டு நெல், அரிசி உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

மேலும், ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் எனவும், அவ்வாறு ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அப்போது எச்சரித்தனர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அளித்துள்ள அறிவுரைகளை முறையாக பின்பற்றுவதாக அப்போது நெல் அரிசி வியாபாரிகள் உறுதி அளித்தனர். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Action under anti-thuggery law against ration rice sellers: Civil Supplies Criminal Investigation Officers Warning
× RELATED அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் அதிநவீன சரக்கு முனையம்