×

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் காங். முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சன்னி: லூதியானா கூட்டத்தில் ராகுல் அறிவிப்பு

லூதியானா: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே, கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதலால், இம்மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக தலித் தலைவரான சரண்ஜித் சிங் சன்னி புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.

அமரீந்தர் தனி கட்சி தொடங்கி பாஜவுடன் இணைந்து போட்டியிடுகிறார்.இந்நிலையில், வரும் தேர்தலில் காங்கிரஸ் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தப் போகிறது என்பது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கான போட்டியில் சன்னி, சித்துவின் பெயர்கள் அடிபட்டன. முதல்வர் வேட்பாளாரை லூதியானா மெய்நிகர் பிரசார கூட்டத்தில் அறிவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.  ்அதன்படி,  லூதியானாவுக்கு நேற்று வந்தார். இக்கூட்டத்தில் ராகுல், முதல்வர் சன்னி, சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய ராகுல் காந்தி, ‘‘பஞ்சாப் தேர்தலில் காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது என்னுடைய முடிவல்ல. பஞ்சாப் மக்களின் முடிவு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கலாம். ஆனால், பஞ்சாப் மக்கள் சன்னியை தேர்ந்தெடுத்துள்ளனர். அதையே நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு தலைவர் 10-15 நாட்களில் உருவாகி விடுவதில்லை. வாழ்க்கையில் போராடி, பல தடைகளை தாண்டிதான் தலைவர்கள் உருவாகிறார்கள். அப்படி பல்வேறு பாதைகளில் இருந்து வந்தவர்கள் தான் சன்னி, சித்து, ஜாகர் உள்ளிட்டவர்கள்,’’ என்றார். பின்னர் பேசிய சரண்ஜித் சிங் சன்னி, ‘‘அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய போர்க்களம். இதில் நான் மட்டும் தனியாளாக போரிட முடியாது. என்னிடம் பணமில்லை. ஆனால், தைரியம் இருக்கிறது. இக்களத்தில் பஞசாப் மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள்,’’ என்றார்.

நான்தான் ராகுல் என சித்துவுக்கு தெரியாது: முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்தை அறிவிக்கும் முன்பாக பேசிய ராகுல் காந்தி, ‘சித்துவை நான் 40 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து இருக்கிறேன். ஆனால், நான் தான் ராகுல் காந்தி என்று அப்போது அவருக்கு தெரியாது. நான்  அப்போது டூன் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். அங்கு கிரிக்கெட் விளையாடுவதற்காக சித்து வருவார்,’ என்று நினைவு கூர்ந்தார்.

Tags : Punjab Legislative Assembly Election Cong ,Saranjit Sunny ,Rahul ,Ludhiana , Punjab Legislative Assembly Election Cong. Chief Ministerial candidate Saranjit Sunny: Rahul announces at Ludhiana meeting
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு