×

திருப்பதியில் புஷ்பா பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரக்கட்டைகள் கடத்தல்

திருமலை: திருப்பதியில் புஷ்பா பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து செம்மரக்கட்டைகள் கடத்தியவரை போலீசார் 5 கி.மீ. தூரம் விரட்டி பிடித்து கைது செய்தனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சேஷாசலம், நல்லமல்லா உள்ளிட்ட இடங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத உயர்ரக செம்மரங்கள் உள்ளது.

இந்த செம்மரக்கட்டைகளுக்கு சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளதால் உள்ளூர் பொதுமக்கள் உதவியுடன் கடத்தல்காரர்கள் வெட்டி கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கடத்தல் மட்டும் குறைந்ததாக இல்லை.

தொடர்ந்து, பல்வேறு வழிகளில் கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டைகளை கடத்தி வருகின்றனர். இதனை மையமாக கொண்டு பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.  இதைப்பார்த்த இளைஞர்கள் சிலர் தாங்களும் புஷ்பா படத்தில் வருவதை போல் கடத்தலில் புதுப்புது யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு, சித்தூர் மாவட்டம் சந்திரகிரி அடுத்த மூலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த  இளைஞர் ஒருவர்  திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்த தனது சரக்கு வேனில் ரகசிய அறை அமைத்துள்ளார். இதில், செம்மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க அதற்கு மேல் தக்காளி டிரேக்களை வைத்து கடத்த முயன்றுள்ளார்.

இதுகுறித்து சந்திரகிரி போலீசாக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் மூலப்பள்ளி சுற்றுப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து ஒரு சரக்கு வேன் வருவதை பார்த்த போலீசார் அதனை நிறுத்த முயன்றனர்.

ஆனால், போலீசாரை பார்த்த வேன் டிரைவர் அதிவேகமாக  வாகனத்தை ஓட்டி தப்பிக்க முயன்றார்.  இதனால் போலீசார் வேனை துரத்திச் சென்றனர். போலீசார் அந்த சரக்கு வாகனத்தை சுமார் 5கி.மீ. தூரம் துரத்திய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகே உள்ள சாலையோர புதரில் புகுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து,  வாகனத்தை சோதனை செய்தபோது  14 செம்மரக்கட்டைகள் இருந்தது. பின்னர், செம்மரக்கட்டைகள் மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரனையும் கைது செய்தனர்.  இந்த செம்மரங்கள் எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பது குறித்து  இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Pushpa ,Tirupati , Smuggling of sheepskin in a secret room in a van in Pushpa style in Tirupati
× RELATED சவுந்தரராஜ பெருமாள் புஷ்ப பல்லக்கு