1000வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சாஹல், ரோகித் அசத்தல்

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ஆல் ரவுண்டர் தீபக் ஹூடா (26 வயது) அறிமுகமானார். ஷாய் ஹோப், பிராண்டன் கிங் இருவரும் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சை தொடங்கினர்.

ஹோப் 8 ரன் மட்டுமே எடுத்து சிராஜ் வேகத்தில் கிளீன் போல்டானார். கிங் 13 ரன், டேரன் பிராவோ 18 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஓரளவு தாக்குப்பிடித்த நிகோலஸ் பூரன் 18 ரன் எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். அடுத்து வந்த கேப்டன் போலார்டு முதல் பந்திலேயே ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார்.

ஷமார் புரூக்ஸ் 12 ரன் எடுத்து சாஹல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் பிடிபட்டார். பிரசித் பந்துவீச்சில் அகீல் ஹுசேன் டக் அவுட்டாகி நடையை கட்ட, வெஸ்ட் இண்டீஸ் 22.5 ஓவரில் 79 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. அந்த அணி 8 ரன்னுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜேசன் ஹோல்டர் - பேபியன் ஆலன் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர்.

இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தது. ஆலன் 29 ரன் (43 பந்து, 2 பவுண்டரி), ஹோல்டர் 57 ரன் (71 பந்து, 4 சிக்சர்), அல்ஜாரி சோசப் 13 ரன் எடுத்து வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவரில் 176 ரன் சேர்த்து ஆல் அவுட்டானது. ரோச் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சாஹல் 4, வாஷிங்டன் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. கேப்டன் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் இருவரும் துரத்தலை தொடங்கினர். கிஷன் நிதானமாக விளையாடி கம்பெனி கொடுக்க, ரோகித் 42 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 60 ரன் (51 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜோசப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோஹ்லி 8 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இஷான் 28 ரன், பன்ட் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இந்தியா 116 ரன்னுக்கு 4வது விக்கெட்டை இழந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், சூரியகுமார் - தீபக் ஹூடா ஜோடி 5வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி ரன் சேர்க்க, இந்தியா 28 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சூரியகுமார் 34 ரன், ஹூடா 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 2, அகீல் உசேன் 1 விக்கெட் வீழ்த்தினர். சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 1000வது ஒருநாள் போட்டியில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கிறது.

சாஹல் 100: இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர் சாஹல், வெஸ்ட் இண்டீசின் புரூக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் என்ற சாதனை மைல்கல்லை எட்டினார். நேற்று 4 விக்கெட் கைப்பற்றிய அவர் 60 போட்டியில் 103 விக்கெட் (சிறப்பு 6/42) எடுத்துள்ளார்.

Related Stories: