×

பிறந்த நாள் கேக் எனக்கே... எனக்கா.!?

நன்றி குங்குமம் தோழி

சீனாவின் வுகான் நகரம் என்றதும் உங்களுக்கு கொரோனா ஞாபகத்துக்கு வருகிறதா? ஆம். இங்கு தான் கொலைகார கொரோனா வைரஸ் உற்பத்தியாகி
உலகத்தையே கோரமாக்கி வருகிறது. கொரோனாவுக்கு இடையே இங்கு நிகழ்ந்த சம்பவம் சீனர்களுக்கும் மனிதாபிமானம் இருக்கிறது என்பதை உணர வைத்துள்ளது. கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி வழக்கம் போல் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு கேக்கை வாங்க வுகான் நகரின் பேக்கரிக்கு சென்றார் டெலிவரி பாய். அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. ஆம். வழக்கமாக வாடிக்கையாளருக்கு பீசா, நூடுல்ஸ் என்று கொண்டு செல்லும் அந்த டெலிவரி பாய்க்கு தான் அந்த உணவு பார்சலை வழங்க வேண்டும் என்று குறிப்பு அந்த பார்சலில் இடம்பெற்றிருந்தது. அதில் 'வாழ்க்கை எளிதானதல்ல. உன் உடல் நலத்தை காத்துக்கொள்ளவும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

அப்போது தான் அந்த டெலிவரி பாய்க்கு தனது பிறந்த நாள் இன்று என்ற நினைப்பே  வந்தது. ஆனாலும் அவருக்கு சந்தேகம். இந்த பார்சல் வேறு யாருக்காவது வழங்கப்பட வேண்டியதா என்று பேக்கரி உரிமையாளரிடம் மீண்டும் கேட்டார் டெலிவரி பாய். இல்லை உங்களுக்கு தான் இந்த பார்சல். கொரோனா தொற்றால் சிக்கி தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு உணவை கொண்டு சென்று குறிப்பிட்ட நேரத்தில் சேர்க்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்த அவர் தனக்கு ஒருவர் பிறந்த நாள் பரிசு அளித்துள்ளதை அறிந்ததும் அவர் செய்வதறியாது திகைத்தார். உடனே அந்த பார்சலை எடுத்துக்கொண்டு அங்கிருந்த படிக்கட்டில் அமர்ந்து பிரித்து பார்த்தார். உள்ளே தனது பெயர் பொறிக்கப்பட்டு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இருந்தது. அந்த பரிசை யார் அனுப்பினார் என்ற ஆவல் தலைதூக்கவே கேக்கை பிய்த்து வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் பேக்கரிக்கு சென்றார்.

அப்போதும் பரிசு அளித்தவர் யார் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் நீங்கள் வழக்கமாக உணவு கொண்டு செல்லும் வாடிக்கையாளர்தான் இந்த கேக்கை புக் செய்து உங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார் என பேக்கரி நிர்வாகி தெரிவித்தார். இப்போது டெலிவரி பாய் கண்களில் கண்ணீர் சிந்தியது. இது ஆனந்த கண்ணீர். நம்மையும் மதித்து ஒருவர் பிறந்தநாள் பரிசளித் திருக்கிறாரே என்று நினைத்தபடி அந்த வாடிக்கையாளருக்கு மனதால் நன்றி தெரிவித்துக்கொண்டும் கேக்கை சுவைத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரின் நெஞ்சை தொட்டுள்ளது.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன் 

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!