×

கொலையாளிகளை கைது செய்ய கோரி பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்: புழல் ஜிஎன்டி சாலையில் பரபரப்பு

புழல்: புழல் பகுதியில் காரை எடுக்க சொன்ன வாய்த்தகராறில், ஒரு முதியவரை அடித்து கொன்ற கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று மாலை புழல் ஜிஎன்டி சாலை பகுதியில் இறந்து போன முதியவரின் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை புழல், சிவராஜ் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் பரதராமர் (61). இவர் கடந்த 1ம் தேதி தனது வீட்டின் முன்பு நின்றிருந்த பக்கத்து வீட்டுக்காரர் குமரனின் பழைய காரை எடுக்கும்படி கூறியுள்ளார்.

அவர் எடுக்கும்போது இருதரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குமரன் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தாக்கியதில் பரதராமர் படுகாயம் அடைந்தார்.  அவரை அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரதராமர் பரிதாபமாக பலியானார். இப்புகாரின்பேரில் புழல் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று பக்கத்து வீட்டுக்காரர் குமரன் (48) என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து பரதராமரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் முதியவர் பரதராமரின் சடலத்தை வாகனத்தில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். புழல் ஜிஎன்டி சாலை, மத்திய சிறைச்சாலை அருகே நடுரோட்டில் பிணத்துடன் வாகனத்தை நிறுத்தி, பரதராமரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், முதியவர் பரதராமரின் கொலைக்கு காரணமான குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் புழல் போலீசார் விரைந்து வந்து, கொலை குற்றவாளிகளை இன்றிரவுக்குள் பிடிக்கிறோம் என உறுதியளித்தனர். இதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு, பிணத்துடன் உறவினர்கள் கிளம்பி சென்றனர்.


Tags : GNT Road , Relatives roadblock with body demanding arrest of killers: Stir on the roaring GNT road
× RELATED புழல் பகுதியில் சர்வீஸ் சாலையில்...