×

அம்மாவை ஏமாற்றியவன் சொத்தில் பங்கு கேட்கலாமா?

நன்றி குங்குமம் தோழி

அன்புத் தோழி...

‘நம்மள கேலி பண்றவங்களுக்கு முன்னாடி  நாம வாழணும்... அதுவும் கவுரவமா வாழ்ந்து காட்டணும்..... அதுக்கு நீ நல்லா படிக்கணுமா...’ இதுதான் என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால் இந்த லட்சியங்கள் எல்லாம் சினிமாவில் தான் நிறைவேறுகின்றன. குடும்பச் சூழல் காரணமாக  என் அம்மாவின் ஆசைகளை என்னால் எட்ட முடியவில்லை. ஒருவேளை என் அம்மா இருந்திருந்தால் எட்டி பிடித்திருக்கலாம். என் அம்மா இப்போது உயிரோடு இல்லை. அவருக்கும் வாழும் போது வறுமையுடன் போராடவே நேரம் சரியாக இருந்தது. ஆனாலும் என்னை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனியாக போராடி என்னை பெற்று வளர்த்தார். அவர் காதல் என்ற பெயரில்  ஒரு காமுகனிடம் ஏமாந்தவர் மட்டுமல்ல,  அவமானமும் பட்ட அப்பாவி. பள்ளியில் படிக்கும் போதே ஒருவனை காதலித்துள்ளார். படிப்பு வீணானதுதான் மிச்சம். அதற்கு அவன், ‘நான் படிச்சா போதாதா’ என்று கூறியுள்ளான். கல்லூரி படிப்பை முடித்தவன், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றினான்.

அப்போது அவன் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்திருக்கிறார். கருவில் நான் உருவானதை அவனிடம் சொன்ன போது, ‘கலைச்சுடு...  வேலை கெடைச்சதும் கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்று ஆலோசனை சொல்லி  உள்ளான். அதற்கான வசதி, வாய்ப்புகள் அப்போது உடனடியாக கிடைக்காததால் நாட்கள் தள்ளி போயின. கலைக்க முடியாத அளவுக்கு நான் வளர்ந்திருந்தேன். அதனால் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அவன் மறுத்துவிட்டான். அம்மா எவ்வளவோ கெஞ்சியும், அழுதும் அடம் பிடித்தும், அவன் பெற்றோரிடம் சொன்னபோது, அவர்களோ, ‘சொத்துக்காக என் புள்ளய வளைக்க பாக்கறீயா’ என்று விரட்டி அடித்திருக்கிறார்கள். ஊர் பெரியவர்களிடம் சொல்ல, பஞ்சாயத்து நடந்த போது அவன், ‘அவ யாரென்றே தெரியாது’ என்று கூறியுள்ளான். ‘அதான் அந்த பொண்ணு வயத்தில் உன் கொழுந்தை வளர்தே’ என்று நியாயத்தை எடுத்து சொல்லி உள்ளனர்.  
அவனோ, ‘அவ யார்கிட்ட படுத்து புள்ளையை வாங்கிட்டாளோ.... அதுக்கு போய் என்னை அப்பா ஆக சொல்றீங்களா’ என்று எகிறி உள்ளான்.

ஆனால் பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள், ‘உங்க கதை ஊருக்கே தெரியும் ஒழுங்கா தாலி கட்டி குடும்பம் நடத்தப்பாரு’ என்று அறிவுரை சொல்லி
உள்ளனர். அவனோ, ‘என்ன அந்த பொண்ணுக்கிட்ட பணத்தை வாங்கிட்டு, படிச்ச வசதியான வீட்டு பையனை  அவளுக்கு கட்டி வைக்க பாக்கிறீங்களா’ என்று வாதம் செய்துள்ளான். அதிர்ந்து போன ஊர் பெரியவர்கள், ‘போலீஸ்ல போய் பார்த்துக்குங்க’ என்று சொல்லிவிட்டார்களாம். தன் பண பலம் மூலம் அவர்களையும் கட்டிப் போட்டுவிட்டான். அவர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் என் அம்மாவுக்கு ‘அட்வைஸ்’ செய்து அனுப்பி விட்டார்கள். எங்களால் அதற்கு மேல் போராட முடியவில்லை. கோர்ட்டுக்கு போய் ஆண்டுக்கணக்கில் அலையத் தெம்பில்லை. அதனால் என் அம்மா ஊராரின் பரிதாபத்துக்கும், பழிச் சொல்லுக்கும் ஆளானதுதான் மிச்சம். மகள் இப்படி ஆகிவிட்டாலே என்ற வருத்தத்தில் என் தாத்தா, ஆயா இருவரும் போய் சேர்ந்து விட்டார்கள்.  வெளியூரில் இருந்த அக்காவின் ஆதரவினால், அந்த ஊரிலேயே என்னை பெற்று வளர்த்தார் என் அம்மா.

வீட்டு வேலை, கட்டிட வேலை  என கிடைத்த வேலை எல்லாம் செய்தார். அம்மாவுக்கு வலிப்பு நோய் வரும். நான் 10வது படித்துக் கொண்டிருந்த போது ஒருநாள், தண்ணீர் எடுக்கப்போன என் அம்மா வலிப்பு வந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டார். அருகில் யாருமில்லாததால் மறுநாள் கிணற்றில் அவர் மிதந்தபோதுதான் எங்களுக்கு விவரம் தெரிந்தது. அதன்பிறகு தனித்து விடப்பட்ட நான், அம்மாவின் அக்கா வீட்டுக்கு சென்றேன். அவர்களுக்கும் கஷ்ட ஜீவனம்தான். எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைக்கு போனேன். வீட்டிலிருந்தபடியே 12வது தேர்வு எழுதினேன். இப்போது அஞ்சல் வழியில் பி.ஏ படிக்கிறேன். பிரச்னை என்னவென்றால், என் பெரியம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். காரணம் எனக்கு திருமணம் செய்யாமல், என்னை விட 2வயது இளையவளான அவரது மகளுக்கு எப்படி திருமணம் செய்வது என்பதுதான். இந்நிலையில் என் தோழி ஒரு யோசனை சொன்னாள். ‘ நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உன் அம்மாவை ஏமாற்றியவன் தான்  உனக்கு அப்பா. அவனுடைய சொத்தில் உனக்கும் பங்கிருக்கு கேளு’ என்றாள்.

அதில் எனக்கு  உடன்பாடில்லை. அதற்கு அவள், ‘‘நீ உன் உரிமையை கேட்கிறாய், மறுத்தால் கோர்ட்டுக்கு போகலாம்.  இப்போதெல்லாம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து  யார் அப்பா என்று எளிதில் கண்டுபிடித்து விடலாம்.  உன் அம்மாவை அசிங்கப்படுத்தியவனுக்கு பாடம் புகட்டலாம். உன் பெரியம்மா குடும்பத்துக்கும் உதவலாம்’ என்கிறாள். அந்த ஆளுக்கு மனைவி, குடும்பம், பிள்ளைகள் எல்லாம் இருக்கிறார்கள். என்னால் அவர்கள் அசிங்கப்பட வேண்டுமா என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்ல எங்களையே வேண்டாம் என்றவரின் சொத்து எதற்கு ? ஆனால் சில நேரங்களில் அவனிடம் சொத்தை பங்கு போட வைப்பதின் மூலம்  என் வாழ்க்கைக்கும் ஒரு அங்கீகாரம்  கிடைக்கும் என்றும்  நினைக்கிறேன். என் அம்மாவுக்கு ஏற்பட்ட அவச்சொல்லுக்கும் ஒரு தீர்வு வரும் என்று நம்புகிறேன். எனவே என் தோழி சொல்வது போல் சொத்தில் உரிமை கேட்க  முடியுமா? முடியும் என்றால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? என் கல்வி சான்றிதழில், குடும்ப அட்டையில் அப்பா என்ற இடத்தில் அவன் பெயர்தான்  இருக்கிறது. அதுமட்டும் போதுமானதா? வேறு சான்றுகள் தேவைப்படுமா?  என் முடிவு நியாயமானதா? கோர்ட்டுக்கு போனால் தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். என்ன செய்யலாம்? எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் தோழி!

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி


நட்புடன் தோழிக்கு,

இந்த இளைய வயதில் எத்தனை பிரச்னைகளை கடந்து வந்து இருக்கிறீர்கள். தனித்து விடப்பட்ட உன் தாயின் போராட்டம், அவர் இறந்ததும் நீங்கள் தொடர்ந்துள்ள போராட்டம்  ஆகியவை எல்லோருக்கும் பாடங்கள். வேலைக்கு போய்க் கொண்டே, வறுமையிலும்  தாயின் லட்சியத்தை நிறைவேற்ற  படித்தே தீருவேன் என்ற உங்கள் உறுதி பாராட்டுக்குரியது. இந்த இக்கட்டான சூழலில், திருமணம் ஆகாத  ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த குழந்தையான நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்வி,  ‘தந்தை சொத்தில் உரிமை இருக்கிறதா?  என்பதுதான். அதாவது சட்டரீதியாக பார்க்கும் போது பொது உரிமையில் சட்டங்கள், சொத்துரிமைச் சட்டங்கள், திருமணச் சட்டங்கள், வாரிசுரிமைச்  சட்டங்கள் எல்லாம்  ஒவ்வொரு மதங்கள் அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளன. எல்லா மதங்களுக்கும்மான பொதுவான உரிமையில் சட்டங்கள் இல்லை.  

குற்றவியல் சட்டங்கள் எல்லா இந்தியர்களுக்குமான பொதுவான சட்டங்களாக இருக்கின்றன. ஆனால் உரிமையில் சட்டங்கள் அவரவர் இருக்கும் மதங்களை சார்ந்தது. சொத்துரிமைச் சட்டங்களும் இந்துக்களுக்கு  இந்து வாரிசுரிமைச் சட்டம், கிறிஸ்துவர்களுக்கு இந்திய வாரிசுரிமைச் சட்டம், இஸ்லாமியர்களுக்கு ஷரியத் சட்டம் என தனித்தனி சட்டங்கள் உள்ளன. உங்கள் பிரச்னையை பொறுத்தவரை நீங்கள் எந்த மதம் என்று சொல்லவில்லை. அதனால் உங்கள் பிரச்னையை பொறுத்தவரை அல்லது உங்களைப் போன்றவர்கள் பொதுவாக ஜீவனாம்சம் என்ற வாழ்வாதார நிதியை பெற உரிமை உள்ளது. ஒரு பெண் தந்தையிடம்  சட்டப்படியான அதாவது முறையான திருமணத்தின் மூலம் பிறந்திருந்தாலும்,  முறைசாரா  திருமணம் செய்துகொள்ளாத தம்பதிகளுக்கு பிறந்திருந்தாலும்  தந்தையிடம் வாழ்வாதாரத்துக்கான நிதியை அதாவது ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது.

அவர்தான்  தந்தை என்பதற்கான  கல்வி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்ற சில ஆதாரங்கள் இருப்பது போதுமானதா?  அவரிடம் ஜீவனாம்சம் கோரலாமா?
அவருக்கு இன்னொரு சட்டரீதியான குடும்பம் இருக்கும் போது இதுபோன்று கேட்க சட்டத்தில் வழி இருக்கிறதா? என்பவைதான் உங்கள் கேள்விகள்.
உங்கள் தாய்  கஷ்டப்பட்டு வளர்த்திருக்கிறார். ஆனால் ஒரு நிலைக்கு வரும் நிலையில் அவர் இறந்து விட்டார். உங்கள் உறவினர்களின் ஆதரவில் இப்போது இருக்கிறீர்கள். உங்கள் தந்தை  அப்படிச்சொன்னால் உங்களுக்கு கோபம் வரலாம்.  உங்கள் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் அந்த நபர் மீது கோபம், வருத்தம் இருக்கின்றன. ஆனாலும் சட்டரீதியாக அணுகும்போது நீங்கள் அவரை தந்தை என்றுதான் குறிப்பிட்டாக வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டம் 125 பிரிவின் கீழ் ஒரு ஆணிடம், அவரது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோர் ஜீவனாம்சம் உரிமை கோரலாம்.

பிள்ளைகள் என்பது சட்டப்படி முறையான திருமணம் மூலம் பிறந்த பிள்ளைகள், முறைசாரா திருமணம் மூலம் பிறந்த குழந்தைகள் என இரண்டு தரப்புக்கும் பொருந்தும். நீங்கள் 18 வயதான பெண்ணாக இருந்தாலும், ஆதரவற்ற நிலையில் இருப்பதாலும்,  இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பதாலும் உங்கள் தந்தையிடம்  ஜீவனாம்சம் கோர முடியும். நீங்கள்  டி.என்.ஏ சோதனை  எல்லாம்  கேட்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் பிறப்புச் சான்றிதழ் அவர்தான் தந்தை என்று சொல்கிறது. கல்வி சான்றிதழ், குடும்ப அட்டை என உங்களிடம் இருக்கும் சான்றிதழ்கள் போதுமானது. தங்குமிடம், உணவு, கல்வி, மருத்துவம் என தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அவர் செலவிட வேண்டியது கட்டாயம். அதற்கு செலவாகும் தொகையை ஒரு மகளாக அவரிடமிருந்து கோரக் கூடிய உரிமை உள்ளது. அவற்றை அவர் ஜீவனாம்சமாக தரவேண்டியிருக்கும்.

சொத்துக்களை  பொறுத்தவரையில்  மூதாதையர் சொத்து, தனிநபர் சொத்து என்று  இரண்டு வகையாக இருக்கின்றன. மூதாதையர் சொத்தை பொறுத்தவரை  முறைசாரா திருமணம் மூலம் பிறந்த குழந்தைக்கு சொத்துரிமை கிடைத்து விடாது. ஏனென்றால் அவர்களுக்கு முறையான திருமணத்தின் மூலம் பிறந்த வாரிசுகள் இருக்கிறார்கள். தனிநபர் சொத்து, அதாவது ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்துகள். அந்த சொத்துகளை யாருக்கு தர வேண்டும் என்பதை சம்பாதித்தவரே சுயமாக முடிவு செய்து கொள்ளலாம். எந்த வகையான வாரிசுகளாக இருந்தாலும்  உரிமை கோர முடியாது. அதேபோல் அவர் இறப்பதற்கு முன்பு உயில் ஏதும் எழுதி வைத்திருந்தால் அதன்படி சொத்துகள் பிரிக்கப்படும். அதே நேரத்தில் அவர் உயில் ஏதும் எழுதி வைக்காமல் இறந்திருந்தால், அந்த சொத்துகளை சட்டரீதியாக பிரிக்க வேண்டியிருக்கும். அந்த சொத்தில் முறைசாரா திருமணம் மூலம் பிறந்த வாரிசு களும் உரிமை கோர சட்டத்தில் இடமிருக்கு.
எனவே உங்கள் பிரச்னையை பொறுத்தவரையில் வாழ்க்கையை நடத்த தேவையான அடிப்படை செலவினங்களுக்காக  மாதம் ஒரு தொகையை ஜீவனாம்சமாக
பெற வழி உள்ளது.

எனவே நீங்கள் அருகில் உள்ள  குற்றவியல் நடுவர் (மாஜிஸ்ட்ரேட்) நீதிமன்றங்கள் அல்லது குடும்பநல நீதிமன்றங்களை அணுகி ஜீவனாம்சம் வழக்கு
தாக்கல் செய்யலாம். வழக்கை நடத்த ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனைகள் பெறலாம். அவர் மூலம் இந்த வழக்கை நடத்தலாம். வழக்கு நடத்த வசதியில்லை என்றால் அரசின்  இலவச சட்ட உதவி மையங்களை அணுகலாம். இந்த மையங்கள் தாலுகா, மாவட்டம், மாநில அளவில் செயல்படுகின்றன. அந்த மையங்களை அணுகினால் உங்களுக்கு வழக்கறிஞர்களை இலவசமாக வாதாட ஏற்பாடு செய்து தருவார்கள். நீங்கள் சட்ட பாதுகாப்பு பெறுவதுடன் உங்கள் உரிமையையும் நிலை நாட்ட முடியும். திருமணம் ஆகாத பெற்றோருக்கு பிறந்தது உங்கள் தவறல்ல. தனக்கு பிறந்த குழந்தையை ஒரு தந்தை கண்டு கொள்ளாமல் இருப்பதை ஏற்க முடியாது. பெற்றோர்கள் செய்த தவறுக்கு பிள்ளைகளை தண்டிக்க முடியாது என்பதால் சட்டம்  உங்களுக்கு உரிய பாதுகாப்பு தரும்.  எனவே நீங்கள் ஒரு வழக்கறிஞரையோ, இலவச சட்ட உதவி மையத்தையோ, மகளிர் ஆணையத்தையோ, சட்டப்பணிகள் ஆணையத்தையோ அணுகி உதவி பெறலாம்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

என்ன செய்வது தோழி
பகுதிக்கான கேள்விகளை எழுதி
அனுப்ப வேண்டிய முகவரி

‘என்ன செய்வது தோழி?’
குங்குமம் தோழி,
தபால் பெட்டி எண்: 2924
எண்: 229, கச்சேரி சாலை,
மயிலாப்பூர், சென்னை - 600 004

Tags :
× RELATED முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவை...