×

அஞ்செட்டி அருகே யானையை சுட்டுக்கொன்ற கும்பல்: 2 பேர் கைது, கள்ளத்துப்பாக்கி பறிமுதல்

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி வனப்பகுதியில், யானையை சுட்டுக்கொன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனச்சரகம் உடுபராணி வனப்பகுதியில், கடந்த 2ம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சுமார் 16 வயது ஆண் யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். அழுகிய நிலையில் கிடந்த யானையின் உடலை, அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். அதன் இரண்டு தந்தங்களை அகற்றிய பின்னர், யானையின் உடலை அங்கேயே புதைத்தனர். இதனிடையே, பிரேத பரிசோதனையில் யானையின் தலையில் துப்பாக்கி குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், யானையை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டது அம்பலமானது. இதையடுத்து, வனத்துறையினர் குழு அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

மேலும், தமிழ்நாடு வன உயிர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த நாய்கள் படை அடங்கிய குழுவை வரவழைத்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதில், சந்தேகத்தின் பேரில் எருமுத்தனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முத்து(35), ஏழுமலையான்தொட்டி காளியப்பன்(28) ஆகியோரிடம் விசாரித்தனர்.

அப்போது, இருவரும் சேர்ந்து யானையை வேட்டையாடியது தெரிய வந்தது. வழக்கம்போல் துப்பாக்கியுடன் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதாகவும், அப்போது எதிர்பாராத விதமாக ஆண் யானையிடம் சிக்கிக் கொண்டதாகவும், அந்த யானை தங்களை துரத்தியதால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாகவும், குண்டு பாய்ந்ததில் யானை உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த  வனத்துறையினர், யானையை கொல்ல பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

தந்தம் வெட்டி எடுக்க திட்டமா?: முயல் வேட்டைக்காக சென்ற இடத்தில் யானையை சுட்டு வீழ்த்தியதாக அவர்கள் கூறுவது வனத்துறையினருக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தந்தத்திற்காகவே யானையை சுட்டு கொன்றிருக்க வேண்டும். தந்தத்தை உடனே அறுத்து எடுக்க முடியாததால், இரண்டு நாள் கழித்து வெட்டி எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து உடலை அழுக விட்டுச் சென்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Anchetti , Elephant shooting gang near Anchetti: 2 arrested, confiscated firearm
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...