×

சர்ச்சைக்குரிய ஜாகீர் நாயக்: புதிய மனு தாக்கல் செய்ய உபா தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: மும்பையை சேர்ந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம், கிளர்ச்சியை தூண்டும்படி பேசியது ஆகிய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் கடந்த 2016ம் ஆண்டு இந்தியாவை விட்டு தப்பியோடினார். அவரது இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு, அது மேலும் 5 ஆண்டுக்கு சமீபத்தில் நீட்டிக்கப்பட்டது.

மலேசியாவில் தஞ்சமடைந்த ஜாகீர் நாயக், அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார். இதற்கிடையே, இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை சட்ட விரோத அமைப்பாக ஒன்றிய அரசு அறிவித்தது தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.  டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் தலைமையிலான இந்த தீர்ப்பாயத்தில், ஜாகீர் நாயக் தரப்பில் ஆஜராக வக்காத்நாமா மேத்தா என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கு ஒன்றிய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜாகீர் நாயக்கின் கையெழுத்திட்ட வக்காத்நாமாவை தாக்கல் செய்யும்படியும், அந்த கையெழுத்து மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் உறுதிபடுத்த வேண்டுமெனவும் உபா தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Zakir Naik ,UPA tribunal , Controversial Zakir Naik: UPA tribunal ordered to file fresh petition
× RELATED மத போதகரின் அமைப்பு மீதான தடை மேலும் 5...