×

உழைப்புக்கு மரியாதை! - டாக்டர், போலீஸ் மாம்பழங்களை உருவாக்கிய விவசாயி...

நன்றி குங்குமம் தோழி

மாம்பழம் என்றால் யாருக்குதான் பிடிக்காது. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் பல்வேறு ரகங்களை உருவாக்கி அசத்தியுள்ளார் விவசாயி ஒருவர். அவர் பெயர் கலிமுல்லா கான். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள நர்சரி கார்டனில் தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார். இதுவல்ல விஷயம்...  இப்போது கொரோனா காலம் என்பதால் நோயை குணப்படுத்துவதில் டாக்டர்கள் மற்றும் போலீசாரின் சேவையை பாராட்டி அவர்கள் பெயரிலேயே புதிய மாம்பழங்களை உருவாக்கியுள்ளார். லக்னோவை சேர்ந்த கலிமுல்லா கான், பிரபல தோட்டக்கலை நிபுணர். மலிகாபாத் பகுதியில் 14 ஏக்கரில் இவரது மாம்பழ தோப்பு அமைந்துள்ளது. 85 வயதாகும் கலிமுல்லா, இன்றும் தன்னுடைய தோட்டத்தை அவரே பராமரித்து வருகிறார். இவரின் தோட்டத்தில் 315 வகையான மாம்பழங்களை பார்க்கலாம்.

ஒட்டுபோடுதல் முறையில் இந்த ரக மாம்பழங்களை உருவாக்கியுள்ளார். மாம்பழ சீசனில் இங்கிருந்து தினமும், 150 லாரி லோடு மாம்பழம் விற்பனைக்குச் செல்கிறது. ஆனால், கலிமுல்லா கானின் 14 ஏக்கர் மாம்பழங்களும், 15 நாட்களில் விற்றுத் தீர்ந்து விடும். தோட்டக்கலை துறையில் 17 வயது பையனாக, 1957ல் நுழைந்தவர் கலிமுல்லாகான். 7ம் வகுப்பில் பெயிலானதால் படிப்புக்கு, “குட்- பை’ சொல்லி விட்டு, 150 வருட குடும்பத் தொழிலான மாம்பழ சாகுபடிக்குள் நுழைந்தார். முதலில் 7 வகையான மாம்பழங்களை உருவாக்கி அசத்தினார். ஆனால் அடுத்த சில நாட்களில் அந்த பகுதியே மழையால் நாசமானது. இதையடுத்து  வெள்ளம் பாதிக்காத இடத்தில் புதியதாக நிலம் வாங்கி, மாமரங்களை நட்டார். அங்கு தான், இன்று வரை அவருடைய தோப்பு இருக்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில், தன்னுடைய தோப்பில், 50க்கும் அதிகமான வகைகளை உருவாக்கினார். நான்காவது வருடம், 250 மாம்பழங்களை உருவாக்கி அசத்தினார். ஒவ்வொரு மாம்பழத்தை பார்த்தவுடனே அது எந்த வகை பழம் என்பதையும் கண்டு பிடித்து, அதன் பெயரை சரியாக கூறி விடுவார் கான். மாம்பழத்திற்கான இவருடைய தனிப்பட்ட உழைப்பையும், சேவையையும் பாராட்டி, 2008ல் இவருக்கு மத்திய அரசு பத்ம விருதினை வழங்கியது. சில ஆண்டுகளுக்கு முன், அபூர்வமான சுவை கொண்ட ஒரு மாம்பழத்தை உருவாக்கி, அதற்கு சச்சின் டெண்டுல்கர் என பெயரிட்டார். இப்போது கொரோனா உழைப்பாளிகளை கவுரவிக்க போலீஸ் மாம்பழம், டாக்டர் மாம்பழங்களை
உருவாக்கியுள்ளார்.

தொகுப்பு: கோமதி பாஸ்கரன்

Tags : Doctor ,
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...